
பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் திடீர் ராஜினாமா..!
பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பதவி வகித்து வந்தவர் பி.கே. சின்ஹா (65). இவர் திடீரென தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரசு மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பி.கே.சின்ஹா, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி இருப்பதாக அதற்கான கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பிரமதர் மோடியின் முதன்மை ஆலோசகர் பதவி விலகியது ஏன் என வினாவுக்கு பலரும் பதில் தேடி வருகின்றனர்.
பி.கே.சின்ஹா 1977ஆம் ஆண்டின் உத்தரபிரதேச மாநில ஒதுக்கீடு ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்தவர். இவர் பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக குறுகிய காலம் பதவி வகித்ததைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
4 ஆண்டு காலம் அதிகாரமிக்க மத்திய அமைச்சரவையின் செயலாளராகவும் இவர் பதவி வகித்து இருக்கிறார். பின்னர் பிரதமரின் பதவிக்காலம் வரையில் அல்லது அடுத்த உத்தரவு வரையில் அவரது பதவி தொடரும் என்று நியமன உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு மாறாக அவர் தாமாகவே பிரதமரின் முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.