dark_mode
Image
  • Sunday, 24 August 2025
பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டுகோள்..!

பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டுகோள்..!

கோடை வெயில் தொடங்கிவிட்டதால், அதை சமாளிக்க தங்கள் குடியிருப்புகளை சுற்றி வசிக்கும் பறவைகளுக்கு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.

எந்தெந்த பறவைகளுக்கு தண்ணீர் தேவை என்பது குறித்து கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சி.என்.எஸ்.) தலைவர் பி.ஆர்.செல்வராஜ் கூறும்போது, "அனைத்து பறவைகளுக்கும் நாம் வைக்கும் தண்ணீர் பயன்படாது. சின்னான் (புல் புல்), மைனா, காகம், தவிட்டுக் குருவி, சிட்டுக் குருவி, தையல்சிட்டு போன்ற பறவைகள் மனிதர்கள் வாழும் இடங்களிலேயே வசிப்பதால், அவற்றுக்குத் தண்ணீர் கிடைப்பது சிரமம். எனவே, அவற்றுக்கு மனிதர்கள் வைப்பது உதவும்.

சில பறவைகள் தண்ணீர் குடிக்கும். சில பறவைகள் சூட்டைத் தணிக்க நாம் வைக்கும் தண்ணீரில் குளியல்போடும். சிறு பறவைகள் பெரும்பாலும் வெயில் காலங்களில் மரங்களுக்குள் தஞ்சம் புகுந்துகொள்கின்றன. பறவைகளுக்கு தண்ணீர் வைப்போர் ஆழமான பாத்திரங்களில் வைக்காமல் 2 அங்குலம் அளவுள்ள தட்டையான பாத்திரங்களிலோ, மண்பாண்டத்திலோ வைத்தால் அவை எளிதாக குடிக்கவும், குளிக்கவும் முடியும்"என்றார்.

சின்னவேடப்பட்டி ஏரி

சின்னவேடம்பட்டி ஏரிப் பகுதியில் தன்னார்வலர்களால் இதுவரை சுமார் 2,800 நாட்டு மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏரியின் உட்பகுதியில் உள்ள மரங்களில், மண் குடுவையை கயிற்றால் கட்டி, அதில் நீர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோடைகாலத்தில் இந்தப் பணியை சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "கோவை வடக்குப் பகுதியின் பிரதான நீராதாரமான சின்னவேடம்பட்டி ஏரி 30 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. இருப்பினும், இங்கு பல்வேறு வகையான பறவையினங்கள் காணப்படுகின்றன. எனவே, அவற்றின் தாகத்தைப் போக்க தண்ணீர் வைப்பது நல்ல பலனை அளிக்கிறது" என்றனர்.

related_post