விரைவில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை.. இன்று அதன் முக்கிய கட்டம்.. எதிர்பார்ப்பில் மெட்ரோ நிர்வாகம்!
பூந்தமல்லி முதல் வடபழனி வரை சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சேவையை தொடங்குவதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CMRS) இன்று முதல் (பிப்ரவரி 11 ஆம் தேதி) முதல் மூன்று நாட்கள் தொடர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வு முடிந்த பிறகே, பொதுமக்கள் பயண சேவைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் என்பதால், இந்த ஆய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது
இன்று முதல் 3 நாள்கள் ஆய்வு
இந்த மூன்று நாள்கள் ஆய்வில் முதல் இரண்டு நாட்கள் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான சோதனைகள் நடைபெற உள்ளன. மெட்ரோ ரயிலின் பாதை அமைப்பு, சிக்னல் முறை, பாதுகாப்பு வசதிகள், ரயில் இயக்க முறை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் விரிவாக பரிசோதிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளில், மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பாதுகாப்பாக இயங்குகிறதா என்பது உறுதி செய்யப்படும்.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை எப்போது?
CMRS ஆய்வு முடிந்ததும், அதன் முழு அறிக்கை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில், பயணிகள் சேவையை தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும். தொடக்க விழா தொடர்பாக, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து தேதி அறிவிக்க உள்ளதாகவும், பிப்ரவரி மாத இறுதிக்குள் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்ட முக்கிய சான்று
இதற்கிடையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த வழித்தடத்துக்கான பெரும்பாலான அனுமதிகளை ஏற்கனவே பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதியில் ரயில்வே வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, கடந்த டிசம்பர் மாதத்திலேயே சிக்னலிங் அமைப்பு, ரயில் பெட்டிகள் ஆய்வு உள்ளிட்ட முக்கிய அனுமதிகள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி - போரூர் வரையிலான நிறுத்தங்கள்
இந்த புதிய சேவையின் முக்கிய அம்சமாக, பூந்தமல்லி முதல் வடபழனி வரை ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது 26 கிலோமீட்டர் நீளமுள்ள பூந்தமல்லி – லைட் ஹவுஸ் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். வழித்தடம் 4-ன் கீழ் இந்த சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த ரயில், பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் வரை மொத்தம் 10 நிலையங்களில் நின்று செல்லும். பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் ஜங்ஷன் ஆகிய நிலையங்களில் ரயில் நிற்கும்.
போரூர் - வடபழனி இடையே உள்ள நிறுத்தங்கள்
போரூரைத் தொடர்ந்து, இடையில் உள்ள ஆறு நிலையங்களை தவிர்த்து, ரயில் நேரடியாக வடபழனி நிலையத்தை அடையும். வடபழனி வந்ததும், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி, அங்கு அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் வழியாக முதல் கட்ட மெட்ரோ வடபழனி நிலையத்துடன் இணைக்கப்படுவர். இந்த ஸ்கைவாக் வசதி, பயணிகளுக்கு எளிதான இடமாற்றத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.