
தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்கள் தாமாக முன்வர வேண்டுகோள் !
இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின் , கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 16 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
இன்று முதல் நாடு முழுவதும் 2ம் கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு மற்றும் பல அரசியல் தலைவர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விடுத்த அறிக்கையில் இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பனவை. உலகின் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. பொதுமக்களுக்கு நாமே முன்மாதிரியாக நின்று வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை கொண்ட பிரதமர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியவுடன் முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 0.0004% மட்டுமே. தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை.60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.