
சமையல் எண்ணெய் விலை 30% அதிகரிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமையல் எண்ணெய் வகைகளின் விலை வரலாறு காணாத வகையில் கடந்த 4 மாதங்களில் 30 சதவீதம் வரை உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி மூலம் மக்களின் தேவையை ஈடுசெய்ய முடியாததால், இந்தியா மலேசியாவிலிருந்து அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. கடந்தாண்டு மழை காரணமாக மலேசியாவில் பாமாயில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தற்போது தொடர்ந்து விலை உயருகிறது.
கலப்பு விதைகளை பயன்படுத்தியதால், அர்ஜெண்டினா, பிரேசிலில் சூரியகாந்தி பயிரின் விளைச்சல் குறைந்து, அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது .
கடந்த காலங்களில் வெறும் 5 சதவீதமாக இருந்த கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை , சிறுக சிறுக அதிகரித்து தற்போதைய பட்ஜெட்டில் 17.5 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் விலை உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
ரஷியா, உக்ரைன் நாடுகளிலிருந்து கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் அதுவரை விலை இன்னும் அதிகரிக்கலாம் என வணிகர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கடலை, எள், தேங்காய் பயிர்களின் வரவு அதிகரித்தால், பழைய விலைக்கு வந்துவிடும் என்றும், தேர்தல் காலமே விலையேற்றத்துக்கு காரணம் என்றும் தேர்தல் முடிவுக்குப் பிறகு விலையேற்றம் ஒரு முடிவுக்கு வரும் என வணிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
குறைந்த அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சிறிய இறக்குமதியாளர்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாததால், பெருநிறுவனங்கள் மட்டுமே எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுகின்றன என்றும் அதனால் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலையில் கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து, அதிக விலையில் இங்கு விற்கின்றனர்.
சிறிய இறக்குமதியாளர்கள் களத்தில் இருந்தால் எண்ணெய் விலை குறையும் என்பது வணிகர்களின் கருத்தாக உள்ளது.