
கொரோனா விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு உத்தரவு!
நாட்டில் நான்கு மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் இன்று 40,000 எட்டிய நிலையில், நோய்த்தொற்றை கட்டுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை செயலர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,953 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 29ஆம் தேதியில் இருந்து தொற்றுப்பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து மீண்டும் 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 1.15 கோடியாக உள்ளது.
நேற்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 188 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தக் கோரி மாநில அரசுக்களுக்கு மத்திய உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 'பொது இடங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல், மெத்தனபோக்குடன் மக்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் தடுப்பு நடைமுறைகளை கடுமையாக்குவதுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாட்டில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பாதிப்பை கட்டுபடுத்துவது குறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.