dark_mode
Image
  • Sunday, 24 August 2025
`குறைந்தபட்ச PF பென்ஷனை ₹3,000 ஆக உயர்த்த வேண்டும்!' - பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

`குறைந்தபட்ச PF பென்ஷனை ₹3,000 ஆக உயர்த்த வேண்டும்!' - பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

குறைந்தபட்சம் தொழிலாளர் வைப்பு நிதியில் 10 ஆண்டுகள் கணக்கு வைத்திருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.எஃப்) பென்ஷன் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாயாக உள்ளது. அதை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தொழிலாளர்கள் ஊதியத்தில் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் நிதியில் ஒருபகுதி பென்ஷன் திட்டத்துக்காக சேமிக்கப்படுகிறது. இவ்வாறு பென்ஷன் திட்டத்துக்காக ஒருவரின் ஊதியத்தில்அதிகபட்சம் 2014 -ம் ஆண்டு வரை மாதம் 541 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு இது 1,250 ரூபாயாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் தொழிலாளர் வைப்பு நிதியில் 10 ஆண்டுகள் கணக்கு வைத்திருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்கும்.

ஒருவரின் பென்ஷன் தொகை என்பது கீழ்க்கண்ட சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது:

பென்ஷன் தொகை = அடிப்படை ஊதியம் * பணியில் இருந்த காலம் /70

இதில் அடிப்படை ஊதியம் என்பது ஒருவருடைய அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி மட்டும் கொண்டதாகும். பல தனியார் நிறுவனங்களில் ஒரு ஊழியரின் ஊதியம் அதிகமாக இருந்தாலும் பொதுவாக அடிப்படை ஊதியம் குறைவாகத்தான் இருக்கும். தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் பஞ்சப்படி வழங்குவது இல்லை.

ஒரு உதாரணத்துக்கு ஊழியர் ஒருவர் அடிப்படை ஊதியமாக 10,000 ரூபாய் பெற்று 25 ஆண்டுக் காலம் பணிபுரிகிறார் என்று வைத்துக்கொள்வோம். மேற்சொன்ன கணக்கீட்டின்படி அவருக்கு எவ்வளவு பென்ஷன் தொகை கிடைக்கும் என்று பார்ப்போம்:

பென்ஷன் தொகை = அடிப்படை ஊதியம் (10,000) * பணிக்காலம் (25)/70 = 3,571

நமது நாட்டில் பலர் மிகக் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். பலரின் அடிப்படை ஊதியம் 10,000-க்கும் குறைவாக இருக்கிறது. அதிக காலம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதும் அனைவராலும் முடியாத காரியமாக இருக்கிறது. சில சிறிய நிறுவனங்கள் முறையாக வைப்பு நிதி செலுத்துவதும் இல்லை. ஓய்வூதியத் திட்டத்தின்படி குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக 1,000 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

தற்போதுள்ள விலைவாசியில் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்குவது ஒருவருக்கு எந்தப் பயனும் அளிக்காது. அதனால்தான் பாராளுமன்ற நிலைக்குழு குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 3,000 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தித் தர வேண்டும் என்று தமது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.

பிஜு ஜனதா தள பாராளுமன்ற உறுப்பினர் பார்த்துஹரி மஹதாப் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற நிலைக்குழு கீழ்க்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது:

1. பல தொழிலாளர்கள் சரியாக நீண்ட காலத்துக்கு இந்தத் திட்டத்தில் சேமிக்காததால் 1,000 ரூபாய்க்கும் குறைவான பென்ஷன் தொகை பெற்று வருகின்றனர். மேலும், பலருக்கு இந்தத் திட்டத்தில் பணம் சேமித்து இருந்தாலும் எந்த பென்ஷன் பணமும் கொடுக்கப்படுவதில்லை. பென்ஷன் தொகை வழங்கப்பட்டாலும் மிக குறைந்த அளவில் பலருக்கு 560 ரூபாய் மட்டுமே பென்ஷன் தொகையாகக் கொடுக்கப்படுகிறது.

2. நீண்ட காலத்துக்கு இந்தத் திட்டத்தில் சேமிக்காத தொழிலாளர்களின் குறைகளை விரைந்து களைந்து அவர்களுக்கு அதிக பென்ஷன் தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

3. குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 1,000 ரூபாய் என்கின்ற அளவில் இருந்து குறைந்த பட்சம் 3,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை உயர்த்தித் தர வேண்டும்.

4. மேலும், இந்தத் திட்டத்தில் சேமிக்கும் பல தொழிலாளர்கள் இடையிலே பணத்தைப் பெற்றுவிடுகின்றனர். இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதற்கும் எவ்வளவு தொகை திரும்ப பெறலாம் போன்ற கட்டுப்பாடுகள் சரிவர இல்லாமல் இருக்கிறது.

5. குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் அரசுக்கு கூடுதலாக சுமார் 15,000 கோடி ரூபாய் செலவாகும்.

6. இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை விரைவாகக் களைந்து தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த மாறுதல்களைச் செய்ய வேண்டும்.

இன்றைய விலைவாசியில் 1,000 ரூபாய் என்பது எந்த அளவுக்கும் பயன் தராது, அதனால் அரசு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் இந்த வழிகாட்டுதல் முறைகளை விரைவாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆக உள்ளது.

related_post