dark_mode
Image
  • Sunday, 24 August 2025
ஐந்து மாநில தேர்தலில் பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளை தோல்வியுறச் செய்ய வேண்டும்: டெல்லியில் போராடும் விவசாயிகள் வலியுறுத்தல்

ஐந்து மாநில தேர்தலில் பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளை தோல்வியுறச் செய்ய வேண்டும்: டெல்லியில் போராடும் விவசாயிகள் வலியுறுத்தல்

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோல்வியுறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தல் எழுந்துள்ளது. இதை டெல்லியில் மத்திய அரசிற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

டெல்லியின் மூன்று எல்லைகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் முதல் போராடி வருகின்றனர். வரும் மார்ச் 6 இல் விவசாயிகள் போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ளது.

இதற்காக, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் வேறு சில மாநிலங்களின் சுமார் 40 விவசாய சங்கங்கள் இணைந்து 'சன்யுக்த் கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்)' எனும் பெயரில் அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

தனது போராட்டத்தில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை எஸ்கேஎம் முன்னிறுத்தி உள்ளது. இவர்கள் போராட்டத்தின் தாக்கம், தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் ஏற்படத் தொடங்கிவுள்ளது.

இந்தத் தேர்தல் குறித்து சிங்கு எல்லையில் நடைபெற்ற எஸ்கேஎம் பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. இதில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோல்வியுறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

எனினும், வேறு எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்வதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தனது முடிவின் மீதானப் பிரச்சாரக் கூட்டம் ஐந்து மாநிலங்களிலும் எஸ்கேஎம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் எஸ்கேஎம் நிர்வாகிகளில் ஒருவரான பல்பீர்சிங் ரஜாவால் கூறும்போது, 'எங்கள் பிரச்சாரக் கூட்டங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என விவசாயிகளிடம் வலியுறுத்துவோம்.

இதில் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் எங்கள் பிரச்சாரம் இருக்காது. எங்களது முதல் கூட்டம் மார்ச் 12 இல் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, நாடு முழுவதிலும் விவசாயப் பயிர்களின் அறுவடை தொடங்கி அவை விற்பனைக்காக சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து விவசாயிகளும் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் எஸ்கேஎம் கோரியுள்ளது.

இந்த அறுவடை மற்றும் விற்பனையினால் போராட்டக் களங்களில் விவசாயிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மார்ச் 15 இல் தனியார்மயமாக்களை எதிர்த்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள தேசிய அளவிலான போராட்டத்திற்கும் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

related_post