
ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது! தரமில்லாத வாகனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்
ஏப்ரல் 1 முதல் வாகனங்கள் தரம் இல்லை என்ற புகார் வந்து மத்திய அரசு வாகனங்களை திரும்பப் பெற உத்தரவிட்டால் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் ரூ.1 கோடி வரை அபராதம் செலுத்த நேரிடும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறைபாடுள்ள வாகனங்களை உற்பத்தியாளர்கள் கட்டாயமாக திரும்பப் பெறுவதற்கான விதிகளை சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு குறிப்பிட்ட மாடல் கொண்ட வாகனத்திற்கு எதிராக அதிக அளவில் புகார்கள் வரக்கூடாது.
குறிப்பிட்ட அளவிலான புகார்களுக்கு மட்டுமே மத்திய நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்துள்ளது. அதையும் தாண்டி தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்குமேயானால், வாகனங்கள் அனைத்தும் கட்டாயம் திரும்பப்பெறப்பட உத்தரவிடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் அல்லது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் திரும்பப் பெறப்படும் பட்சத்தில் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் என விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வாகன வகைகளின் அடிப்படையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அளவுக்கு அதிகமான புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்தால் ஆட்டோ மொபைல் நிறுவனம் தாமாக முன்வந்து வாகனங்களை திரும்பப் பெற வேண்டும்.
அப்படி இல்லை என்றால் வாகனங்களை சோதனை செய்வதற்கான விதிகள் மற்றும் மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும்.
இந்த புதிய விதிகள் ஏழு வருடங்களுக்கு குறைவான வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். உதாரணத்துக்கு ஒரு கார் ஆண்டுக்கு 500 விற்கப்படுகிறது என்றால், 100 புகார் வந்தாலே அவை அனைத்தும் திரும்பப் பெறப்படும்.