
ஏபிபி கருத்துக்கணிப்பில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் மம்தா..!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது.
அதேபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே இந்த முறை சட்டசபை தேர்தலில் பெரியளவு வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க தேர்தல் குறித்த ஏபிபி கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஏபிபி கருத்துக்கணிப்பில் தகவல். அதேநேரம் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இந்த முறை 98 முதல் 114 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒரு காலத்தில் மாநிலத்தில் மிகவும் வலுவாக இருந்த இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி வெறும் 23 முதல் 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்தக் கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.