dark_mode
Image
  • Sunday, 24 August 2025
இந்தியாவில் வீணாகும் 7 கோடி டன் உணவு: ஐ.நா., அறிக்கை

இந்தியாவில் வீணாகும் 7 கோடி டன் உணவு: ஐ.நா., அறிக்கை

ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அதன் கூட்டு நிறுவனம் இணைந்து எந்தளவு உணவு வீணாகிறது என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் 2019-ல் உலகளவில் 93 கோடி டன்கள் அளவிற்கு உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.வீணடிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 61% வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு சேவை நிறுவனங்களாலும், 13% சில்லறை விற்பனையாலும் ஏற்பட்டுள்ளது. வீணடிக்கப்பட்ட உணவுகளின் அளவு, மொத்த உலக உணவு உற்பத்தியில் 17% வரை இருக்கக் கூடும் என்கின்றனர். வீணான இந்த உணவு பொருட்களை லாரிகளில் ஏற்ற வேண்டுமானால் 40 டன் கொள்ளளவு கொண்ட 2.3 கோடி லாரிகள் தேவைப்படும். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தினால் உலகையே 7 வட்டமடிக்கலாம் என ஐ.நா., அமைப்பு கூறுகிறது.மேலும், ஐ.நா., அறிக்கையின் படி, இந்திய வீடுகளில் வீணாகும் உணவின் அளவு ஆண்டுக்கு 6.8 கோடி டன்கள் ஆகும். இது அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.9 கோடி டன்கள், சீனாவில் 9.1 கோடி டன்களாக உள்ளது. ஓட்டல்கள் போன்ற உணவு சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் முறையே 5% மற்றும் 2% வீணடிக்கின்றன. பருவநிலை மாற்றம், இயற்கை, பல்லுயிர் அழிவு, சூழல் மாசு போன்ற பிரச்னைகளை சமாளிக்க உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், குடிமக்கள், தொழில் நிறுவனங்கள் உணவு வீணாவதை குறைக்க தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.இவ்வளவு உணவு வீணடிக்கப்பட்ட அதே 2019-ல் உலகம் முழுவதும் 69 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு வீணாகாமல் தடுப்பது எப்படிகொரோனா பாதிப்பால் இந்த எண்ணிக்கை 2020-ல் உயர்ந்திருக்கும் என்கின்றனர். மேலும் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வீடுகளில் உணவு வீணாவதை குறைக்க உதவி தேவை என்று ஐ.நா., கூறுகிறது. உணவு வீணாவதை குறைப்பதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை குறைக்கலாம், மாசுபாட்டை குறைக்கலாம், இயற்கை அழிவது குறையும், பட்டினி குறையும், பணம் மிச்சமாகும் என்கின்றனர்.

related_post