
இங்கிலாந்துக்கு ஏதிராக நடராஜன் விளையாடுவதில் சிக்கல்?
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் சிறப்பாக விளையாடினார். அங்கு நடைபெற்ற டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய அபார பந்துவீச்சின் காரணமாக அனைவரது கவனத்தையும் பெற்றார். இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்போது நடராஜன் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பயிற்சியும், காயம் குணமடைவதற்கான மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகிறார்.