dark_mode
Image
  • Sunday, 24 August 2025
9,10,11 -ஆம் வகுப்புகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அரசு அறிவிப்பு

9,10,11 -ஆம் வகுப்புகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அரசு அறிவிப்பு

கரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து அடுத்த அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் நலன் கருதி வரும் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள், கரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் 10, 12-ம் வகுப்புகள் கடந்த ஜனவரி 19-ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர் 8,9,11-ம் வகுப்புகள் பிப்ரவரி 8-ம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

ஆனால் கடந்த 10 நாட்களாக கரோனா தொற்று இந்திய அளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இதன் எண்ணிக்கை தினம் 200, 300 என அதிகரித்து நேற்று 1000- ஐ கடந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க தலைமைச் செயலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சையில் பல பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மூடப்படும் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் தலைமைச் செயலர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி 9,10,11-ம் வகுப்புகளுக்கு வரும் 22-ம் தேதிமுதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆன்லைனில் வகுப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே ஆல்பாஸ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக கல்வி வாரியம் தவிர மற்ற தேர்வு வாரியங்களுக்கு அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுகள் அறிவித்தப்படி நடக்கும். இதற்கான அவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், அவர்களுக்கு பள்ளி விடுதிகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாணையில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

related_post