dark_mode
Image
  • Friday, 29 November 2024

2026ல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும் - அண்ணாமலை!

2026ல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும் - அண்ணாமலை!

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும் என்று இந்திய ஜனநாயக கட்சி மாநாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 'தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்' என்ற மாநில மாநாடு திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் சிறப்புரை ஆற்றினார். தமிழக பாஜக மாநில தலைவர்அண்ணாமலைமற்றும் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இந்த மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசுகையில், நாய்களை பயன்படுத்தி வேட்டையாடும் காட்டு நாயக்கர் இன மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஜக்கம்மாளை வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த சமுதாய மக்களை அழைத்துச் சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தேன். அதன் பேரில், நாய்களும், முயலும் வன விலங்கு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்பட்டது. வேட்டி கட்டிய தமிழன் இந்த நாட்டை ஆள மாட்டானா? என்று பல ஆண்டு காலமாக பலரும் பேசியிருக்கின்றனர். அது நடக்கத் தான் போகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த போது, மோடியை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்து வந்தோம். அப்போது, இருவரும் பெற்ற தாயை பற்றித் தான் அதிகம் பேசினோம். அப்போது, நீங்கள் ஆறு மாதத்தில் பிரதமராக வருவீர்கள், என்றேன். மோடிக்கு அந்த தகுதியும் இருந்தது. அவர் ஒரு தெய்வப்பிறவி, ஞானி, துறவி. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் வந்தவர்கள் யாராக இருந்தாலும், உயர்வு பெற்று இருக்கின்றனர். இந்தியாவின் பெயரையும் புகழையும் உயர்த்துவதற்கு காரணமாக இருக்கும் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறார். தமிழகத்தின் செங்கோளை பாராளுமன்றத்தில் நிறுவியதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடமைப்பட்டு உள்ளோம்.

நாம் வாழும் தமிழ் பூமியில், பிரிவினையை மறைமுகமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையை எங்கு தான் கண்டுபிடித்தார்கள், என்று தெரியவில்லை. அவர்கள், அந்த வார்த்தையை சொல்லும் போது, நான் பெரிதும் புண்படுத்தப்படுகிறேன். நாட்டின் ஜனநாயகத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் ஊழல், லஞ்சம், மது ஒழிக்கப்பட வேண்டும். வரும் தேர்தலில், மீண்டும் வெற்றி பெறுவதன் வாயிலாக அதை செய்வோம் என பாரிவேந்தர் பேசினார்.

இந்த மாநாட்டில்பா.ஜ.கமாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, இந்திய நாட்டில் உள்ள 543 பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பெண் கொடுத்து, அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்தால், பாரிவேந்தர் முதன்மையானவராக இருப்பார். கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, பதினேழு அரை கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி கொடுத்தது. ஆனால், பெரம்பலுார் தொகுதி எம்.பி.,யாக இருந்த பாரிவேந்தர், அதை விட 15 மடங்கு, 126 கோடி ரூபாய் தொகுதி மக்களுக்காக செலவு செய்துள்ளார். நல்ல மனிதர்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் பாரிவேந்தரை மீண்டும் கொண்டு வர வேண்டும். பாரி வேந்தர் மீண்டும் எம்.பி.,யாக வருவார், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ராஜராஜ சோழன் போல், பாராளுமன்றத்தில் செங்கோலை சாட்சியாக வைத்து, பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழி மூத்த மொழியாக இருந்தாலும், நாட்டில் உள்ளவர்கள் அதன் கலாச்சாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அந்த கூட்டில் இருந்து விடுவித்து, உலகம் முழுவதும் படம் பிடித்துக் காட்டுவதற்கு பிரதமர் மோடி தேவைப்பட்டிருக்கிறார். மூன்றாவது முறையாக, மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியில் அமரப் போகிறார். அதன் பின்‌ 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும். கடந்த மூன்று ஆண்டுகளில் செய்ததாக, ஒரு சாதனையை கூட சொல்லாமல், அண்ணாத்துரை வீசிய பிஞ்சு போன எடுத்து வைத்துக் கொண்டு, வடக்கு, தெற்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

தமிழகத்துக்கு, இரண்டு சைனிக் பள்ளிகள் வரபோவதாக அறிவிப்பு வெளியானதும், பெரம்பலுாருக்கு, உலகத் தரம் வாய்ந்த சைனிக் பள்ளியை கொண்டு வர வேண்டும், என்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர் பாரிவேந்தர். ஓட்டளித்த மக்களுக்காக, 24 மணி நேரமும் உழைக்க வேண்டும் என்ற குறிகோளோடு பணி செய்தவர் பாரிவேந்தர் ஒருவர் தான். அதனால், 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அவரது வெற்றி, பெரம்பலுார் தொகுதியில் உறுதி செய்யப்பட்டு விட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில், 400 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் போது, பாரிவேந்தர் வாயிலாக பெரம்பலுார் தொகுதி மக்கள், முழுமையான பலனை பெறப்போகிறீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

2026ல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும் - அண்ணாமலை!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description