“நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்!” – ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் மோடி உரை பரபரப்பு
புதுடில்லி: இந்தியா மிக வேகமாக முன்னேறி வரும் நாடாக திகழ்கிறது, நக்சல்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்தாலும், அவர்களின் ஆதிக்கம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை பற்றி விரிவாக பேசினார்.
மோடி கூறியதாவது: “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்தியாவை யாரும் தடுக்க முடியாது. இந்தியா இப்போது நிற்காது, ஓடும் நாடாக மாறியுள்ளது. பல சவால்களில் இருந்து நாம் மீண்டு முன்னேறி வருகிறோம்.
செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இது இந்தியாவை உலகம் நம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்கியதற்கான ஒரு பெரிய சான்று.
2014க்கு முன்பு ஊழல், பெண்கள் பாதுகாப்பு குறைபாடு, பயங்கரவாத ஸ்லீப்பர் செல் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் இந்தியாவைச் சூழ்ந்திருந்தன. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் நாம் அந்த சவால்களை தகர்த்தெறிந்தோம்.
இந்தியா ஒருகாலத்தில் மோசமான பொருளாதாரத்தில் இருந்தது. இன்று உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தை கடந்துள்ளது.
சிறு வணிகம் முதல் பெரிய தொழில்துறை வரை, இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது. நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும் மக்கள் முன்னேறி வருகின்றனர்.
பயங்கரவாதிகள் தாக்கியபோது, இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், விமானப்படை தாக்குதல், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ போன்ற நடவடிக்கைகள் மூலம் உரிய பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பாராட்டின.
பயங்கரவாதத்தை இந்தியா பொறுமையாக தாங்காது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது எதிர்பாராத சாதனை.
கோவிட் காலத்தில் பல நாடுகள் தடுமாறின. ஆனால் இந்தியா அதன் தாக்கத்தை சமாளித்து இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளது.
சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் வர்த்தக குழுவுடன் இந்தியா வந்தது, உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தியா இப்போது நம்பகமான கூட்டாளியாக உலக அரங்கில் திகழ்கிறது.
டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. யுபிஐ மூலம் இந்தியா உலகை வழிநடத்துகிறது.
2014க்கு முன்பு இந்திய மக்களின் பாதிக்கும் வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் நாங்கள் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளோம். வங்கி சேவையை பொதுமக்களுக்கு கொண்டுசெல்ல முடிந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் ஏழைகளிடம் இருந்து தள்ளி இருந்தன. ஆனால் இன்று அரசு உண்மையில் ஏழைகளின் கைகளில் நிதி அதிகாரத்தை கொடுத்துள்ளது.
முன்னாள் அரசுகள் அளவில்லா வராக்கடன்களை ஏற்படுத்தின. நாங்கள் அவற்றை சரிசெய்து பொருளாதாரத்தை நிலைநாட்டினோம். பெட்ரோல் பங்குகள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்ற காலத்திலிருந்து இன்று 24 மணி நேரம் திறந்திருக்கின்றன.
பிஎஸ்என்எல், எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இப்போது லாபத்தில் புதிய சாதனைகள் படைக்கின்றன. இது நம் சீர்திருத்தங்களின் விளைவு.
2015ல் 1 ஜிபி டேட்டா ₹300க்கு விற்கப்பட்டது. இன்று அது ₹10க்கே கிடைக்கிறது. மக்களின் வாழ்வை எளிதாக்குவதே எங்களின் குறிக்கோள்.
வரி செலுத்துவோருக்கான மரியாதையை உயர்த்தியுள்ளோம். ரூ.12 லட்சம் வருமானம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்கள் ₹2.5 லட்சம் கோடி வரை சேமிக்க முடிந்துள்ளது.
2014ல் நக்சல் தாக்கம் 125 மாவட்டங்களில் இருந்தது. இன்று அது 11 மாவட்டங்களாக குறைந்துள்ளது. முன்பு பஸ்தரில் வாகனங்கள் எரிக்கப்பட்டன, பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று அதே இடத்தில் இளைஞர்கள் பஸ்தர் ஒலிம்பிக் நடத்துகின்றனர்.
கடந்த 75 மணி நேரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர். இது மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கம்.
நக்சல்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர். ஆனால், அவர்களின் ஆதிக்கம் இல்லாத இந்தியாவை உருவாக்கி காட்டுவோம். இதற்கான விலையை ஆதிவாசி மக்கள் இனி செலுத்த வேண்டியதில்லை.
இந்தியா இப்போது தன்னம்பிக்கையுடன் நிற்கிறது. “நம்பிக்கை, முன்னேற்றம், நக்சல் இல்லாத இந்தியா” — இதுவே எங்களின் இலக்கு,” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.