ஹைதராபாத் நிகாப் சர்ச்சை: முஸ்லிம் பெண்களின் முகத்திரையை விலக்கக் கூறிய பாஜக வேட்பாளர் - என்ன நடந்தது?
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், வாக்குப்பதிவின் போது நிகாப் (முகத்திரையுடன் கூடிய ஆடை) முஸ்லிம் பெண்களின் முகத்திரையை விலக்கி முகத்தை காட்ட சொன்னதாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாதவி லதா அளித்த பேட்டியில், "இது 20 ஆண்டுகால சமூக சேவையின் விளைவாக நடந்தது. 8-10 மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் 1008 இலவச சுகப்பிரசவங்கள் செய்யப்படும் என்று அறிவித்தேன். என்னுடைய இந்த பணியை பார்த்து டெல்லியில் இருக்கும் மோதி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அவர் என்னை நேரில் சந்திக்கவில்லை, ஆனால் அங்கே டெல்லியில் இருந்தபடியே என் பணிகளைப் பார்த்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். " என்றார்.
யார் இந்த மாதவி லதா?
முஸ்லிம் பெண்கள் மத்தியில் மாதவி லதாவுக்கு இருக்கும் ஆதரவை கருத்தில் கொண்டு, அவருக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் சில செய்திகளில் குறிப்பிடப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா பாஜக தரப்பு, "இது மாதவி லதாவை வீழ்த்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி" என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஹைதராபாத்தில் நான்காம் கட்டமாக நேற்று (மே 13) வாக்குப்பதிவு நடைபெற்றது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில், வாக்குப்பதிவின் போது மாதவி சில முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டை கேட்பது பதிவாகியுள்ளது. மேலும், மாதவி அவர்களின் முகத்திரையை விலக்குமாறு கோருவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
ஹைதராபாத் தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "யாருடைய புர்காவையும் அகற்ற சொல்ல எந்த வேட்பாளருக்கும் உரிமை இல்லை" என்று குறிப்பிட்டார். தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில், மாதவி லதா மீது திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஹைதராபாத் ஆட்சியரின் கூற்றுப்படி, மாதவி லதா மீது மாலக்பேட் காவல் நிலையத்தில் ஐபிசி - 171 சி, 186, 505 (1) சி மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 132 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாதவி லதாவுக்கு எதிராக சில இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாதவி லதாவிடம் முஸ்லிம் பெண்களின் நிகாபை அகற்ற சொன்னது பற்றி கேட்டபோது, "சகோதரரே, நான் ஒரு வேட்பாளர். சட்டத்தின்படி, முகத்திரை இல்லாமல் அடையாளத்தை சரிபார்க்க வேட்பாளருக்கு உரிமை உண்டு. நான் ஒன்றும் ஆண் கிடையாது. நான் ஒரு பெண். எனவே நான் கேட்டதில் தவறில்லை'' என்றார்.
மேலும், "அந்தப் பெண்களிடம் நான் உங்கள் முகத்தை பார்த்து அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டேன். யாராவது இதை வைத்து பிரச்னை செய்ய விரும்பினால், அவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம்." என்று மாதவி கூறியுள்ளார். மேலும் சில வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பட்டுள்ளதாகவும் மாதவி லதா குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாதவி லதா, "90 சதவீத வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்காளர் அடையாள அட்டையை வைத்து பெண்களின் முகத்தை சரி பார்க்குமாறு பெண் காவலரிடம் காவல்துறை உத்தரவிடவில்லை. அதனால் நான் செய்தேன். எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் நீதிக்காக நின்றேன். நான் காவல்துறையை விசாரிக்க சொல்லி கேட்டபோது, அது எங்கள் வேலை அல்ல என்று மறுத்துவிட்டனர்." என்று குற்றம்சாட்டினார்.
"இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல். ஹைதராபாத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் முஸ்லிம் பெண்களுக்கு இடையூறு கொடுப்பதுடன், அவர்களை அவமானப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அசாதுதீன் ஓவைசி-யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
ஹைதராபாத் தொகுதியில் மாதவி லதாவுக்கு எதிராக ஓவைசி போட்டியிடுகிறார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி 2004 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் தொகுதியில் இருந்து எம்பியாக உள்ளார்.
தற்போது முஸ்லிம் பெண்களின் நிகாபை நீக்க சொன்ன விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கிய மாதவி லதா, தனக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு மாதவி லதாவிடம், "முஸ்லிம் வாக்காளர்கள் உங்களை தேர்வு செய்வார்களா?" என்று கேட்கப்பட்டது.
"முஸ்லிம் வாக்காளர்கள் எங்களுக்கு சமமாக வாக்களிப்பார்கள். ஆனால் அதற்காக நாங்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி உழைக்கவில்லை. ஹைதராபாத் அரசியல் களம் மிகவும் மதச்சார்பற்றது, ஏழை முஸ்லிம்களும் ஏழை இந்துக்களைப் போல தான். ஒவைசி இந்த முறை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார்." என மாதவி லதா பதிலளித்தார்.
மாதவி லதா, ஓவைசி தரப்பில் சொல்வது என்ன?
பாஜக, ஹைதராபாத் தொகுதியில் வேட்பாளராக மாதவி லதாவை அறிவித்தது முதல் அவர் தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.
முன்னதாக ஏப்ரல் மாதம், ராம நவமி தினத்தன்று, மாதவி லதா மசூதியை நோக்கி அம்பு விடுவது போல் சைகை செய்தார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சை தீவிரமடைந்தது. இதைதொடர்ந்து மாதவி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அந்த சம்பவத்தை தொடர்ந்து விளக்கம் கொடுத்த மாதவி லதா, "என் கையில் அம்பு எதுவும் இல்லை. தீபாவளியின் போது பட்டாசுகள் கொளுத்தப்படுவது போல ராம நவமியின் போது அம்பு எய்துவது வழக்கம். நாங்கள் அம்புகளை எய்த இடத்தில் மசூதி இல்லை. என் மீது வழக்கு பதிவு செய்தவர் அவர்களின் கிளிப் பிள்ளை." என்றார்.
சர்ச்சை தீவிரமடைந்ததால் ஓவைசி இதுகுறித்து கருத்து தெரிவித்தார் "தற்போது பாஜக வேட்பாளர்கள் மசூதியை நோக்கி அம்பு எய்துவதாக சைகை காட்டுகின்றனர். நீங்கள் கற்பனை அம்பு தான் எய்கிறீர்கள், ஆனால் உங்கள் அம்புகளுக்கு நாங்கள் 'அன்பால்' பதிலளிப்போம். ஏனென்றால் இது ஹைதராபாத். இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நினைவில் கொள்ள வேண்டும். " என்றார்.
மாதவி லதாவின் பெயர் செய்திகளில் வருவது புதிதல்ல
ANIமாதவி லதா
ஹைதராபாத்தில் வசிக்கும் மாதவியின் தந்தை ராணுவப் பொறியியல் சேவை பிரிவில் சேமிப்பறைப் பொறுப்பாளர்.
பாஜக வட்டத்தில், மாதவி லதா சிறந்த பேச்சாளராக கருதப்படுகிறார். மாதவி லதாவின் பேட்டியை பாராட்டி பிரதமர் மோதி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மாதவி ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
மாதவி லதா இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படி இருக்கையில் மாதவிக்கு பாஜக எப்படி சீட் கொடுத்தது?
அசாதுதீன் ஓவைசியின் 'அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்' கட்சி மிகவும் பழமையான அமைப்பாகும். சுருக்கமாக `மஜ்லிஸ்' என்று அழைக்கப்படும். இது சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு சமூக-மத அமைப்பாக தொடங்கப்பட்டது.
1948 இல் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்த போது, இந்திய அரசு மஜ்லிஸ் கட்சியை தடை செய்தது. அப்போது அதன் தலைவராக இருந்த காசிம் ராஜ்வி கைது செய்யப்பட்டார். பின்னர் ராஜ்வி பாகிஸ்தான் சென்றுவிட்டார். அந்த அமைப்பின் பொறுப்பு அக்கால பிரபல வழக்கறிஞர் அப்துல் வஹாத் ஓவைசியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து, அதாவது 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவைசி குடும்பம் மஜ்லிஸ் கட்சியை வழிநடத்தி வருகிறது. 1957 ஆம் ஆண்டில், மஜ்லிஸ் ஒரு அரசியல் கட்சியாக மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது, அதன் பெயரில் 'அகில இந்திய' என்று சேர்க்கப்பட்டு, கட்சியின் சட்டமும் மாற்றப்பட்டது.
அப்துல் வஹாத் ஓவைசிக்குப் பிறகு, 1976-இல் கட்சியின் பொறுப்பு அவரது மகன் சலாவுதீன் ஓவைசிக்கு சென்றது. சலாவுதீன் ஹைதராபாத் எம்.பி.யாக இருந்தார், 2004 வரை தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றார். தற்போது சலாவுதீன் ஓவைசியின் மகன் அசாதுதீன் ஓவைசி கட்சியின் தலைவராகவும், ஹைதராபாத் தொகுதி எம்பியாகவும் பதவி வகிக்கிறார், அவரது தம்பி அக்பருதீன் ஓவைசி தற்காலிக சபாநாயகராக உள்ளார்.
2004-ம் ஆண்டு ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்தார் அசாதுதீன் ஓவைசி. ஐந்தாவது முறையாக 2024 தேர்தலில் ஓவைசி போட்டியிடுகிறார், இம்முறை அவருக்கு எதிராக மாதவி லதா போட்டியிடுகிறார். வாக்குகள் பதிவாகியுள்ளன. முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும்.
ஹைதராபாத் தொகுதி மற்றும் ஓவைசி குடும்பம்