வாட்ஸாப் குழுவில் பாக்., புகழ்பாடிய 30 பேர்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

சென்னை: பாகிஸ்தான் புகழ்பாடி, 'வாட்ஸாப்' குழுவில் தகவல் பரப்பிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களா என, கோவை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொந்தளிப்பு
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணியர் 26 பேரை, ஏப்ரல் மாதம் 22ம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, நாடு முழுதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தினர், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், நம் நாட்டில் வசிக்கும் சிலர், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு எதிரான தகவல் பரப்பி வருகின்றனர். அவர்களின் பின்னணி குறித்து, மத்திய உளவு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
தொடர் விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த, 30 பேர், பாகிஸ்தான் புகழ்பாடி, 'வாட்ஸாப்' குழுக்களில் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அவர்கள், பயங்கரவாத ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்கள் குறித்து, கோவை, தென்காசி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினர், பல்வேறு பெயர்களில், புதிய அமைப்புகளை துவக்கி செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.
அவர்களை ஐ.எஸ்., மற்றும் அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினர் ஒருங்கிணைத்து வருவதாகவும் ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, தீவிர விசாரணை நடக்கிறது.
தகவல் பரிமாற்றம்
சில தினங்களுக்கு முன், வாட்ஸாப் குழுக்களில், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை விமர்சித்து, பதிவுகள் வெளியாகி உள்ளன. அத்துடன் நாச வேலை குறித்த தகவல் பரிமாற்றமும் நடந்துள்ளது.
இதில், 30 பேர் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள், பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்களா என்பது குறித்தும், அவர்களை இயக்கும் நபர்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.