கேரளாவில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் – முதல்வர் பினராயி விஜயன் உறுதி

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் பல தசாப்தங்களாக குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக நிலவி வரும் சிக்கல் குறித்து, அந்த மாநில சட்டசபையில் முக்கியமான விவாதம் நடைபெற்றது.
இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ. ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் மத்திய அரசிடம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உறுதி பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடந்த பல ஆண்டுகளாக வேலை, தொழில், கல்வி போன்ற காரணங்களுக்காக கேரளாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் சமூகநீதி திட்டங்களின் கீழ் கிடைக்கும் அரசு நலன்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்குக் காரணமாக மத்திய அரசு வகுத்துள்ள தற்போதைய விதி குறிப்பிடப்படுகிறது. அதன்படி, 1950 ஜனவரி 1க்கு முன்பாக கேரளாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே ஜாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், 1950க்கு பிறகு குடிபெயர்ந்த தமிழர்கள் மற்றும் பிற மொழி சிறுபான்மை மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக ஒதுக்கீடு உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சிக்கலை சரிசெய்ய நடுவட்டம் கோபாலா கிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்வுக்குப் பிறகு, 1950 என குறிப்பிடப்பட்ட ஆண்டை 1970 ஜனவரி 1 வரை நீட்டிக்க பரிந்துரைத்தது.
அந்த அறிக்கை மாநில அரசால் பரிசீலிக்கப்பட்டது. இதனை சட்டப்பூர்வமாக மாற்ற மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என்பதால், கேரள அரசு ஒரு விரிவான கருத்துருவை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசிடம் உத்தியோகபூர்வமாக திருத்த பரிந்துரை அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
பின்பு ஆகஸ்ட் 26ஆம் தேதியிலும் அமைச்சரவை கூட்டம் மீண்டும் நடைபெற்றது. அதில், தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான திருத்தத்தை மத்திய அரசு ஏற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது என முடிவு எடுக்கப்பட்டது.
பினராயி விஜயன் இதுகுறித்து கூறியதாவது:
“1950க்கு முன்பாக கேரளாவுக்கு புலம்பெயர்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கே தற்போது ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், அந்நேரத்தில் யார் யார் புலம்பெயர்ந்தனர் என்பதற்கான முழுமையான ஆவணங்கள் அரசிடம் இல்லை.
எனவே, தற்போது உள்ள ஷரத்துகளைத் திருத்தி மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாகும். அதனால், மத்திய அரசுடன் இணைந்து இதற்கான சட்ட ரீதியான தீர்வை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனும் நோக்கில், மத்திய அரசை வலியுறுத்தி அழுத்தம் தரப்படும். அதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன,” என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், கேரளாவில் நீண்டநாட்களாக நிலவி வரும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் சமூக உரிமைச் சிக்கல் தீர்வுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு உண்மையாக முன்வந்து செயல்பட்டால், பல தலைமுறைகளாக கல்வி, வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் பின்தங்கிய தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை ஒளி பிறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அரசு நிலைப்பாடு மற்றும் சட்டதிருத்த முயற்சிகள் மத்திய அரசின் அங்கீகாரம் பெறும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகவல் கேரளாவில் வசிக்கும் தமிழ் பேசும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் செய்தியாக மாறியுள்ளது.