ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பொருளாதாரத்தில் விரைவில் பெரிய மாற்றம் - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80ஆவது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் நடந்த தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பு, பொருளாதார வளர்ச்சி, அரசின் திட்டங்கள் பற்றி பேசினார். 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் வரப்போவதாகவும் அவர் கூறினார். ஜிஎஸ்டி வரி இரண்டு அடுக்குகளாக இருப்பதை விரைவில் ஒன்றாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மதுரை சிந்தாமணி அருகே உள்ள ஐடாஸ்கட்டர் தனியார் மஹாலில் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வேல்சங்கர் தலைமையில் விழா நடந்தது. கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். சக்தி மசாலா சாந்தி, துரைசாமி, இதயம் நல்லெண்ணெய் விஜய் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "நான் புகுந்த வீட்டுக்கு போகும்போது நல்ல நல்லெண்ணெய், தரமான நல்லெண்ணெய் இருக்க வேண்டும் என்பார்கள்" என்று கூறினார். மதுரை என்றாலே சங்கம் தான். உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருவது சிறப்பானது. இது மதுரையின் பழமையை காட்டுகிறது. 1945-ல் 18 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சங்கம், உணவுப் பொருளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது என்றார்.
சில விஷயங்கள் புரியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி தமிழகத்தின் நுணுக்கங்களை புரிந்து கொண்டு உதவி செய்து வருகிறார் என்று தெரிவித்தார். 2047-ல் இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதை நோக்கி அனைவரும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
2047-ல் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும். வணிகம் வளர வேண்டும் என்பதே நோக்கம் என்று அவர் கூறினார்.
ஜிஎஸ்டி என்பது சீர்திருத்தம் தான். தற்போது 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு வரி விகிதங்கள் உள்ளன. 2017-ல் ஜிஎஸ்டி வந்தபோது இதே நிலைதான் இருந்தது. வரி விகித மாற்றங்களை மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சேர்ந்து தான் முடிவு செய்கிறார்கள். இது ஒரு கூட்டு முடிவு. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மாநிலத்தில் வரி மாறுபடும். இதற்கு முன்பு செஸ், வாட் என பல வரிகள் இருந்தன. இப்போது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக மாற்றியுள்ளனர்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு
சோப்புக்கு ஆந்திராவிலும், தமிழகத்திலும் ஒரே விலை தான். ஒவ்வொரு பொருளும் எந்த வரி சதவீதத்தில் வருகிறதோ, அதை பொருத்து விலை நிர்ணயிக்கப்படும். இதில் மோடி அரசுக்கு நாடகம் ஆட வேண்டிய அவசியம் இல்லை. மக்களை ஏமாற்றி ஆதாயம் சம்பாதிப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இதுவரை 375 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. நான்கு வரி அடுக்குகளை இரண்டாக குறைத்துள்ளோம். ஆண்டுக்கு 12 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் தான் வரி கட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை குறைத்துள்ளோம். சொத்து வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் குழந்தைகளுக்கு கூட நன்மை கிடைக்கும். இந்த வரி குறைப்பு 140 கோடி மக்களுக்கும் பொருந்தும். இது ஒரு புரட்சி. தீபாவளி போனஸாக கொடுங்கள். வட மாநிலங்களில் நவராத்திரிக்கு பூஜை பொருட்கள் வாங்குவார்கள். 12 சதவீதமாக இருந்த 99 பொருட்கள் தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீத பொருட்கள் மட்டுமே 18 சதவீதத்தில் உள்ளன.
அக்டோபர் 22-ம் தேதி முதல் 12 சதவீதமாக இருந்த பொருட்கள் 5 சதவீதமாக குறைந்துள்ளது. 90 சதவீத பொருட்கள் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி இணைந்த ஒன்றரை கோடி பேர்!
2017-ல் 65 லட்சம் பேர் ஜிஎஸ்டியில் இருந்தனர். இப்போது ஒன்றரை கோடி பேர் ஜிஎஸ்டியில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஜிஎஸ்டியை கப்பர்சிங் டேக்ஸ் என்று விமர்சிக்கிறார். ஆனால் ஜிஎஸ்டி மூலம் வருமானம் அதிகரித்துள்ளது. முன்பு 7.19 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது 22 லட்சம் கோடிக்கு மேல் வந்துள்ளது.அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினேன். கட்சி பாகுபாடு இல்லாமல் கடிதம் அனுப்பினேன். வரி மூலம் வரும் பணத்தை வைத்து தான் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும். வருவாய் குறைந்தால் நல்ல திட்டங்களை கொண்டு வர முடியாது.
வரி மூலம் அரசுக்கு வராமல், மக்களின் கையில் 2 லட்சம் கோடி பணம் இருக்கும். ஆட்டோமொபைல் உற்பத்திக்கு PLI கொடுத்தோம். அதைவிட பத்து மடங்கு பணம் மக்கள் கையில் போகிறது. வரி குறைவதால் நிறைய பொருட்கள் வாங்குவார்கள். உற்பத்தி அதிகரிக்கும். நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் வரி செலுத்துவார்கள். இப்படியாக பொருளாதார சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு பொருள் மீதும் வரியை குறைத்துள்ளோம். இது நல்ல வளர்ச்சி. ஜிஎஸ்டி வரி இரண்டு அடுக்குகளாக இருப்பதை ஒன்றாக்கி விடுவோம். ஆனால் இன்றைய தேதியில் அதை செய்ய முடியாது. ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சியும் வேறு வேறாக இருக்கிறது. ஏழை செருப்பு வாங்குவதற்கும், கார் வாங்குவதற்கும் ஒரே வரி விதித்தால் எப்படி இருக்கும்? இந்த உதாரணத்தை அருண் ஜெட்லி கூறினார். ஜிஎஸ்டி ஒன்றாக்க முடியும். அதை கொஞ்ச நாளில் செய்வோம்.
5 சதவீதத்தில் இருந்து ஜீரோவுக்கு சென்ற பொருட்கள் பால், தயிர் போன்றவை. பலசரக்கு சாமான்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வந்துள்ளது. ஜிஎஸ்டி வந்த பிறகு ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான வரி குறைந்துள்ளது. ஜிஎஸ்டிக்கு முன்னரே இன்சூரன்ஸ் பிரீமியத்தில் வரி இருந்தது. இப்போது வரி சீர்திருத்தத்திற்கு பின்பு இன்சூரன்ஸ்-க்கு வரி கிடையாது.
நடுத்தர வகுப்பினருக்காக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி
தமிழகத்தில் மிடில் கிளாஸ் நிறைய பேர் உள்ளனர். கார், பிரிட்ஜ், ஏசிக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பார்த்து பார்த்து குறைக்க சொன்னது மோடி தான். ஏழை குடும்பங்கள், நடுத்தர குடும்பங்கள், பின்தங்கிய விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற்றம் அடைய நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.விவசாயிகள் பயன்படுத்தும் பொருட்கள், நுண்ணீர் பாசனம், டிராக்டர்கள், இதர கருவிகளுக்கு 5 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கு ரீபண்ட் கொடுத்து சரிக்கட்டுகிறோம். நாட்டின் முன்னேற்றம் ஏற்றுமதியில் உள்ளது. எதை குறைக்க வேண்டும், எப்படி குறைக்க வேண்டும் என 8 மாதமாக யோசித்தோம். பிப்ரவரியில் பட்ஜெட் தயாரிக்கும்போது விலையை மட்டும் குறைக்கவில்லை. பணம் முடங்கி விடுகிறது. பணம் கொடுக்க நாளாகிறது. உங்களுக்கு வரவேண்டிய பணம் 90 சதவீதம் தானாக கிடைத்துவிடும். அதில் 10 சதவீதம் நிறைகுறைகளை பார்த்துவிட்டு பணம் திரும்ப வந்து விடும். ரீபண்ட் பணம் முடக்கம் என்ற கவலை இனிமேல் இருக்காது.
ஜிஎஸ்டி பதிவு செய்ய வரும்போது கவலை இருந்தது. இப்போது 3 நாட்களில் பதிவாகிவிடும். 144 வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்போர்ட் 20 ஆகிவிட்டது. 60 சதவீதம் ரோடுவேஸ் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஸ்டார்ட்அப்ஸ் 350 பேர் இருந்த இடத்தில் தற்போது ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். அதன் மூலம் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இந்திரா ஆட்சிக்காலத்தில் 100 ரூபாய் சம்பாதித்தால் 95 ரூபாய் வரியாக போனது. தற்போது 12 லட்சம் சம்பாதித்தாலும் வரி கட்ட வேண்டியதில்லை என்று சொல்கிறோம்.
எல்லா பொருட்களையும் பார்த்து பார்த்து குறைத்துள்ளோம். தேசிய அளவில் உணவுப்பொருள் உற்பத்தி 2024-25ல் 44 பில்லியன், 22 சதவீதம் அதிகரித்துள்ளது. புட் பிராசசிங் யூனிட்டில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. புட் பிராசசிங் உற்பத்தியில் 8 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. இதைத்தவிர 24 ஆயிரம் சிறுகுறு தொழில் உணவுப்பொருள் உற்பத்தியில் உள்ளனர். 8 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உள்ளது. தமிழகத்தில் பதப்படுத்தும் தொழிலில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளது.
2047 பற்றி பேசினேன். 20 வருடங்களில் நிறைய மாறுதல்கள் வரப்போகுது. டிஜிட்டலைசேசன், காமர்ஸ், ஈகாமர்ஸ், ஒரு பொருள் வாங்கும்போது குறைகளை தேடி கண்டுபிடித்து போகும் தொழில்நுட்பம் தேவைப்படும். எதையும் மறு சுழற்சி செய்யும் வகையில் பேக் செய்ய வேண்டும். இனிமேல் நாட்டுக்குள் மாத்திரம் மட்டுமல்ல குளோபல், டொமஸ்டிக் மார்க்கெட்டிங்கை மனதில் வைத்து சந்தைப்படுத்த வேண்டும். அதற்கேற்றவாறு பொருள் உற்பத்தி செய்ய வேண்டும் என்றார்.
இந்த விழாவில் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்விஎஸ்எஸ் வேல்சங்கர், கெளரவ ஆலோசகர் எஸ்பி ஜெயப்பிரகாசம், கெளரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.