வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவன் புது விளக்கம்
சென்னை: ''பார் கவுன்சில் தேர்தலுக்காக, உயர் நீதிமன்ற வளாகத்தில், என்னை வைத்து நடந்த விவகாரத்தை பெரிதாக்கி விட்டனர்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை வி.சி., சார்பில், 'அரசமைப்பு சட்ட பாதுகாப்பும் உச்ச நீதிமன்றமும்' என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கு நடந்தது. இதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணி நலனுக்காக பேசுகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தலித் மக்களுக்கு எதிராக, என்னை கொண்டு போய் நிறுத்துகின்றனர்.
நான் தலித்துகளுக்கு ஆதரவாக பேசவில்லை. தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்கின்றனர். நான் பேசும் அரசியலை விமர்சிக்கிறபோது, நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.
ஈ.வெ.ராம சாமியை கன்னடன் என்றால், நாளை அம்பேத்கரை மராத்தி என்று சொல்ல எவ்வளவு நாட்கள் ஆகும். அவர்கள் இருவரும் வேண்டாம் என்றால், சமத்துவத்திற்கான எந்த அரசியலை நான் பேச முடியும்.
பாபர் மசூதி இருந்த இடத்தில், ஹிந்து கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. அவற்றை உச்ச நீதி மன்றமும் கூறியுள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த விவகாரத்தில், அந்த தம்பி என்ன ஜாதி, மதம் என தெரியாது. அவரது முகத்திலும் எழுதவில்லை. வழக்கறிஞரை தாக்கியதாக பல குரல் எழுகிறது.
நான் மட்டும் வழக்கறிஞர் இல்லையா? ஒரு கட்சியின் தலைவரை வழிமறித்து நிற்கிறார்.
அவரின் பாதுகாப்பு என்ன என்று யாரேனும் கேள்வி எழுப்பினரா; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதலை யாராவது பேசினரா? அவருக்கு ஆதரவாக தீர்மானம் போடவோ, அச்சம்பவத்தை கண்டிக்கவோ ஆளே இல்லை.
என்னை வைத்து உயர் நீதிமன்றத்தில் நடந்தது, பா.ஜ.,-ஆர்.எஸ்.எஸ்., திட்டமிட்ட சதி. என் பாதுகாப்பு குறித்து முதலிலேயே கேள்வி எழுப்பி இருந்தால், இவை எங்களுக்கு எதிராக திரும்பி இருக்காது.
விரைவில், பார் கவுன்சில் தேர்தல் வர உள்ளதால், இவற்றை பெரிதாக்கி விட்டனர். குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக, திருமாவளவனை முன்னிறுத்த முயற்சிக்கின்றனர். இவற்றை மக்கள் புரிதலுக்காக கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.