dark_mode
Image
  • Friday, 07 March 2025

மீட்டர்கள் வாங்க வேண்டிய நிறுவனங்கள் விலை விபரம் வெளியிட்டது மின்வாரியம்

மீட்டர்கள் வாங்க வேண்டிய நிறுவனங்கள் விலை விபரம் வெளியிட்டது மின்வாரியம்

 

சென்னை: ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவு மீட்டர்களை வாங்க வேண்டிய நிறுவனங்கள், அவற்றின் விலை விபரத்தை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த மீட்டர்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம், புதிய மின் இணைப்புக்கான பல்வகை கட்டணத்தில் இடம்பெறுகிறது.

வீடுகளில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தின் கீழ், 3 கோடி மீட்டர்கள் பொருத்தி, பராமரிக்கும் பணிக்கு மின்வாரியம், 2023ல் 'டெண்டர்' கோரியது. இதனால், வழக்கமான மீட்டர்கள் வாங்குவது குறைக்கப்பட்டது.

அனுமதி

இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதால், மீட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்களே நேரடியாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனங்களின் பெயர், விலை விபரங்கள், மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் மீட்டரை வாங்கி, வாரிய பணியாளர்களிடம் வழங்கினால், அதை பரிசோதித்து பொருத்தப்படும்.

ஒருமுனை மீட்டர் விலை 970 ரூபாய். இந்த மீட்டரை, 'ஹோலி மீட்டர்ஸ் இந்தியா, கேபிடல் பவர் சிஸ்டம்ஸ், லிங்க்வெல் டெலிசிஸ்டம்ஸ், ஷெனைடர் எலக்ட்ரிக் இந்தியா, ஜீனஸ் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர்' ஆகிய ஐந்து நிறுவனங்களிடம் இருந்து வாங்கலாம்.

மும்முனை மீட்டர் விலை 2,610 ரூபாய். இதை, 'ஹோலி மீட்டர்ஸ் இந்தியா, கேபிடல் பவர் சிஸ்டம்ஸ், லிங்க்வெல் டெலிசிஸ்டம்ஸ், எச்.பி.எல்., எலக்ட்ரிக் அண்டு பவர், ஷெனைடர் எலக்ட்ரிக் இந்தியா, ஜீனஸ் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர்' ஆகிய ஆறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கலாம் என, மின்வாரியம் தெரிவித்துஉள்ளது.

ரூ . 8,000

மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ள மின் இணைப்புகளில், 'பை - டைரக் ஷனல்' மீட்டர் பொருத்தப்படுகிறது.

அதில், சூரியசக்தி மின் உற்பத்தி, மின் வாரியத்திற்கு வழங்கிய அளவு, வாரிய மின்சாரத்தை பயன்படுத்திய அளவு உள்ளிட்ட விபரங்கள் பதிவாகின்றன.

இந்த மீட்டரை, ஷெனைடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்திடம் இருந்து, 8,000 ரூபாய்க்கு வாங்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாழ்வழுத்த தொழில் நிறுவனங்கள், 'லிங்க்வெல் டெலிசிஸ்டம்ஸ், கேபிடல் பவர் சிஸ்டம்ஸ்' ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஸ்மார்ட் மீட்டரை, 7,481 ரூபாய்க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

comment / reply_from

related_post