மிஸ்ஸான காஷ்மீர்.. திமுகவிடம் சண்டை செய்யும் பாஜக! உதயநிதி செய்த அதே தவறு..பாயிண்டை பிடித்த எச்.ராஜா
திமுக அயலக அணி வெளியிட்ட இந்தியா மேப்பில் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி இல்லாமல் போன நிலையில் பாஜகவின் கடும் எதிர்ப்பை அடுத்து அந்த பதிவு நீக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரிவினை விஷத்தை எந்த வகையில் திணித்தாலும் அதற்கான விலையை கொடுத்து தீர வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவரான எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவுக்கும் இந்தியாவை ஆளுக கட்சியான பாஜகவுக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய பிரச்சனை கிளம்பி இருக்கிறது. திமுகவுக்கு எதிராக தேச துரோக குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது பாஜக.
திமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர்களைப் போல், சார்பு அணிகளுக்கு தனி தனியாக செயலாளர்கள், அமைப்பாளர்கள், மாவட்ட அளவில் தொடங்கி ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் உள்ளனர்.
அந்த வகையில், தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, மகளிர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, அயலக அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, இலக்கிய அணி, கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, சட்டத்துறை, சிறு பான்மைநலஉரிமைப் பிரிவு, சுற்றுச்சூழல் அணி, தொழிலாளர் அணி, நெசவாளர் அணி,
பொறியாளர் அணி , மகளிர் தொண்டர் அணி, மருத்துவ அணி, வர்த்தகர் அணி, அயலக அணி உள்ளிட்ட பல அணிகள் செயல்படுகின்றன. இந்நிலையில் அயலக அணியின் பதிவால் தான் சர்ச்சை முளைத்திருக்கிறது.
ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனியாக சமூக வலைதள பக்கங்கள் இருக்கும் நிலையில் அதில் திமுகவின் திட்டங்கள், சாதனைகள் அன்றாட நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திமுக செயலக அணி சார்பில் ஒரு எக்ஸ் பதிவு போடப்பட்டது. அதில் திராவிட மாடல் ஆட்சியில் கல்வியை போல் தமிழகம் பொருளாதாரத்திலும் வளர்ந்து வருகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த இந்திய வரைபடத்தில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என பதிவிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பதிவில் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி இடம் பெறவில்லை. காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதி அந்த வரைபடத்தில் இடம்பெறாத நிலையில் பாகிஸ்தானுக்கு காஷ்மீரின் ஒரு பகுதியை திமுக தாரை வாத்து கொடுத்துள்ளது என பாஜக விமர்சனம் செய்தது. இது தொடர்பாக திமுக செயலக அணியின் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்த எஸ்ஜி சூர்யா உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதை அடுத்து திமுக அயலக அணி அந்த பதிவை டெலிட் செய்து விட்டு அதற்குப் பிறகு புதிய இந்திய வரைபடத்தை பதிவிட்டது. இருந்த போதும் திமுகவின் பழைய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்த பாஜகவினர், தொடர்ந்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரிவினை விஷத்தை எந்த வகையில் திணித்தாலும் அதற்கான விலையை கொடுத்து தீர வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவரான எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திராவிட நாடு என தாய்நாட்டை பிளக்க நினைத்த தங்கள் கட்சியிடம் தேசப்பற்றினை எதிர்பார்ப்பது மிகையோ முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே !
தங்கள் திமுக அயலக அணி பதிவிட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியையே விடுத்து சித்தரித்தலிலேயே அறிவாலயத்தின் தேசப்பற்றின் லட்சணம் தெள்ளத் தெளிவாகி விட்டது. 2020ல் தங்கள் மகனும் துணை முதல்வருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதேபோன்று இந்திய வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்த நிலையில் இந்த பதிவையும் கவனக்குறைவு என சொல்லப் போகிறீர்களா?
இதற்கு முன் குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும் நிகழ்வில் சீன கொடியை நமது ஏவுகணையில் பயன்படுத்திய தங்கள் கட்சிக்கு என்று தான் தன் சொந்த நாட்டின் மீது பற்று வரும்? தங்கள் கட்சியின் இதே அயலக அணியைச் சேர்ந்த திரு ஜாபர் சாதிக் தான் போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தொடர்ந்து சமூக சீர்கேடான செயல்களில் ஈடுபட்டு வரும் அயலக அணியின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்திய வரைப்படத்தை தவறாக சித்தரித்தற்கும் தொடர்ந்து தேசப்பற்றின்றி நடந்து வருவதற்கும் திமுக அறிவாலத்தின் தலைவராக தாங்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்பதே மக்களின் குரல். எனவே, திமுக இதை நீக்கிவிட்டது, தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறது என்பதெல்லாம் இரட்டை வேஷம் என்கிற அளவில்தான் இனி பார்க்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. பிரிவினை விஷத்தை எந்த வகையில் திணித்தாலும், பேசினாலும் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டுமென்பதை மறக்க வேண்டாம்" என கூறியுள்ளார்.