
மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு ..!
நாட்டில் வேலையின்மை, வறுமை, பணவீக்கம் ஆகியவற்றை மட்டுமே மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு லாக்டவுன் நடவடிக்கையைக் கொண்டுவந்தபோது, திட்டமிடாமல் லாக்டவுனைக் கொண்டுவந்துவிட்டது, பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்தார்.
அவ்வப்போது கரோனா வைரஸ் பரவல் தொடர்பாகப் புள்ளிவிவரங்களுடன் கூடிய வரைபடங்களையும் ட்விட்டரில் வெளியிட்டு மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வந்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த திட்டமிடப்படாத லாக்டவுனால், ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள், சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், ஏழைகளின் கைகளில் நிதியுதவியை நேரடியாக அளிக்க வேண்டும், உணவு தானியங்களை இலவசமாக வழங்கிட வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் மத்திய அரசை கடுமையாகக் குற்றம்சாட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் ' மத்தியில் ஆளும் இந்த அரசு எதை உயர்த்தியுள்ளது. வேலையின்மை, பணவீக்கம், வறுமை, தன்னுடைய பணக்கார நண்பர்களின் வருமானத்தை மட்டுமே உயர்த்தியுள்ளது'எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பொருளாதாரம் குறித்த சில விவரங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில் ' கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக, நடுத்தரவருமானம் பெறக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 9.90 கோடிபேர் இருந்தனர்.ஆனால், கரோனா வைரஸுக்குப்பின், 6.60 கோடியாகக்குறைந்துவிட்டனர்.
2011ம்ஆண்டு முதல் 2019ம் ஆண்டுகளுக்கு இடையே நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் நிலையிலிருந்து குடும்பத்தார்கள், நடுத்தர குடும்பத்தை நோக்கி உயர்த்தப்பட்டுள்ளார்கள். நாள்தோறும் 2 அமெரிக்க டாலர்கள்(ரூ.150) அல்லது அதற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் 7.50 கோடி மக்களிடம் இருந்துதகவல் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.