பேடிஎம் வங்கி சேவைகள் மார்.15 வரை தொடரலாம்: தளர்வு அளித்த ஆர்பிஐ!
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சேவைகளை பிப்.29-ம் தேதியுடன் நிறுத்த மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் காலக்கெடு மார்ச் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில், கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகள் மார்ச் 15, 2024 வரை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், பயனர்கள் அடிக்கடி கேட்கும் பேடிஎம் தொடர்பான கேள்விகளுக்கு ஆர்பிஐ பதிலளித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்குகளில் பணம் உள்ள வரை அவற்றை எடுக்கவும் பரிமாற்றம் செய்யவும் முடியும். இதற்கு பேடிஎம் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மார்ச் 15-க்குப் பிறகு வாடிக்கையாளர்கள் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியாது. கடன் பரிவர்த்தனையோ வைப்பு நிதியோ அந்த கணக்குகளில் மேற்கொள்ள இயலாது. வட்டி, கேஷ்பேக், ரீபண்ட் ஆகியவை பெற்றுக் கொள்ளலாம்.
பேடிஎம்மின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அவரது எக்ஸ் வலைத்தளப் பதிவில், "பேடிஎம்மின் கியூஆர், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்ட் மெஷின் ஆகியவை மார்ச் 15-க்குப் பிறகும் எப்போதும் போல இருக்கும். ஆர்பிஐயின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் வெளியாகியுள்ளன. வதந்திகளை நம்பாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.