ஏப்ரல் முதல் வாரத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தமிழகத்தில் தொடங்கப்படும்: தலைமைப் பொதுமேலாளர் தகவல்
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் தமிழ்மணி கூறினார்.
ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 4.65 லட்சம்பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்,தினமும் 250 முதல் 1,120 வரைபுதிய இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 6,000 பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி கோபுரங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் 4ஜி சேவை வழங்கும் திறனுள்ளவையாக மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எவ்விதமான தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாத 200-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிதாக 4ஜி சேவைவழங்கும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை 5ஜிசேவையை வழங்கத் திறனுள்ளவையாக உடனடியாக மேம்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வரும். பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி சிம் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், அருகில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையங்களில் 4ஜி சேவைக்கான சிம்கார்டுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், வாடிக்கையாளர் 4ஜி சிம்கார்டு பெறும்போது, 4 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும் பிஎஸ்என்எல்சேவையில் குறைபாடு இருந்தால்1800 4444 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பிஎஸ்என்எல் மதுரை வட்ட பொதுமேலாளர் லோகநாதன், துணைப் பொதுமேலாளர் ரோஸ்லின் ராஜகுமாரி, காரைக்குடி வட்டபொதுமேலாளர் வனஜா, துணைப் பொதுமேலாளர் துரைசாமி உடனிருந்தனர்.