பெண்களுக்கு உரிமை, விடுதலையை சாத்தியமாக்க உண்மையாக உழைப்போம்!

அனைவரின் உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8&ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.
21&ஆம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டாகி விட்ட போதிலும் இன்னும் பெண்களுக்கு முழுமையான விடுதலையும், உரிமைகளும் கிடைக்கவில்லை. வீடுகள் தொடங்கி அலுவலகம் வரையிலும், ஆட்சி மன்றத்திலும் பெண்கள் அவர்களின் உரிமைகளுக்காக போராடும் நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றப் பட்டாலும், அதிகாரம் இன்னும் எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் வழங்கப்பட்டாலும் கூட, அதை பயன்படுத்தும் உரிமை குடும்பத்தினரிடம் தான் இருக்கிறதே தவிர, பெண்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. இப்படியாக உரிமை, அதிகாரம், விடுதலை ஆகியவையும், பெண்களும் தண்டவாளங்களைப் போல இணையாமல் இணையாகவே பயணிக்க வேண்டியுள்ளது.
எப்போது பெண்கள் நள்ளிரவில் நடுவீதிகளில் நகைகளை அணிந்தபடி அச்சமின்றிச் சுதந்திரமாக நடந்துசெல்ல முடிகிறதோ அந்த நாள்தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் என்று மகாத்மா காந்தியடிகள் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியா விடுதலையடைந்து 78 ஆண்டுகளாகியும் அது இன்னும் சாத்தியமாகவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அவர்களால் எப்படி சாதிக்க முடியும்?
ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைத்துக் கொள்ளாமல், உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
செய்தியாளர். மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description