பெங்களுரு குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி கைது: என்ஐஏ அறிக்கை
பெங்களுரு குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக என் ஐ ஏ விளக்கமளித்துள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள 18 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் முஷாமி ஷரீப் என்பவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பு திட்டத்திற்கு துணையாக செயல்பட்டதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்ததனர் , மேலும், முசாவீர் சாஹிப் ஹுசைன் மற்றும் அப்துல் மதீன் தாஹா எனும் மேலும் இரண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
தேடப்படும் இரண்டு நபர்களின் புகைப்படங்களை என்ஐஏ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதுடன், அதுகுறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சாய் பிரசாத்தை, நேற்று தினம் என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே கைதானவர்களுடன் சாய் பிரசாத் தொடர்பில் இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இது குறித்தான அறிக்கை ஒன்றை என்ஐ ஏ வெளியிட்டுள்ளது. அதில்,குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய நபரின் அடையாளம் காணப்பட்டுள்ளது, அவரது பெயர் முசாவிர் ஹூசைன் சாஹிப் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த சதிச்செயலில் அவருக்கு உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா , இருவருமே கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உதவிய முசாமில் ஷரீப் என்பவர் கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தலைமறைவான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு தொடர்புடைய நபர்களை என்ஐஏ விசாரித்து வருகிறது. சாட்சிகளின் அடையாளம் குறித்த எந்தத் தகவலும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதோடு, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் என்ஐஏ தெரிவித்துள்ளது.