dark_mode
Image
  • Saturday, 19 April 2025

புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் நோயால் முதல் உயிரிழப்பு பதிவு!

புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் நோயால் முதல் உயிரிழப்பு பதிவு!

மகாராஷ்டிராவில் ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் நோய் பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை 101 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் ஒருவர் உயிரிழிந்திருப்பதாக முதற்கட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

 

மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும். இந்த நோயால் இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் ஒரு நோயாளி இன்று உயிரிழந்தார். இதனால் இன்று முதல் மரணம் பதிவாகி உள்ளது.

 

சோலாபூர் மாவட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட அந்த நபர் தனிப்பட்ட வேலைகளுக்காக சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சளி, இருமல் தொந்தரவு ஏற்பட்டு பின்னர் மூச்சுத் திணறல் ஆகியுள்ளது. அதற்காக ஜனவரி 18ம் தேதி சோலாப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் ஐசியூவிலும் பின்னர் வார்டிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆரம்பத்தில் உடல்நலம் தேறியுள்ளது. பின்னர் மீண்டும் மூச்சித் திணறல் ஏற்பட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சஞ்சீவ் தாக்கூர் கூறுகையில், “சோலாபூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் மருத்துவக் கூராய்வுக்காகக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட ஆய்வின்படி அவர் கில்லியன் பார் சிண்ட்ரோமால் இறந்ததாகத் தெரிகிறது. அந்த நபருடைய மருத்துவ சிகிச்சை அறிக்கையை நான் பரிசோதித்தேன். அவர் 5 நாள் சிகிச்சை பெற்றும் கூட நோய்க்கு பலியாகியுள்ளார். அறிக்கையின் படி கில்லியன் பார் சிண்ட்ரோம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

 

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கிர்கித்வாடி, டி.எஸ்.கே. விஷ்வா, நான்டெட் நகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கு தடுப்பூசி கிடையாது. இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் வந்த உடன் நரம்பியல் மருத்துவரை அணுகினால் குணம் அடையலாம்.

 

முதுகு அல்லது கால்களின் ஆழமான தசை வலி, பக்கவாதம், சுவாச பிரச்சினை, பேசுவதில் சிரமம், பார்வை பிரச்சினைகள், இருமல், சளி அறிகுறிகள் ஆகும். அரிய நோய் பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால், சுகாதார அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 25,578 வீடுகளில் நோய் பாதிப்பு இருக்கிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

தற்போது அபாயமான கட்டத்தில் 16 பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். 9 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களை அதிகமாக இந்த அரிய நோய் பாதிப்பு தாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from

related_post