"புதுச்சேரி கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது!" உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும்! உதயநிதி ஸ்டாலின்
புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுச்சேரியின் முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்தார். எப்போதும் பள்ளி முடித்துவிட்டு விளையாட செல்லும் அச்சிறுமி, இரவுக்குள் வீடு திரும்பிவிடுவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் உடனடியாக சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பதிவு செய்த போலீசார் சிறுமியை தேட தொடங்கியுள்ளனர். சிறுமி வழக்கமாக விளையாடும் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் முதற்கட்டமாக 7 பேரை பிடித்து விசாரணையை தொடங்கினர்.
ஒருபுறம் விசாரணை நடந்துக்கொண்டிருக்கையில், மறுபுறம் அம்பேத்கர் நகரில் உள்ள சாக்கடை ஒன்றில், மூட்டை இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மூட்டையை ஆய்வு செய்த போலீசார், மூட்டையில் இருப்பது சிறுமியின் சடலம் என்பதை உறுதி செய்தனர். கை, கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுக்க ரத்த காயங்களோடு சிறுமியின் உடல் கிடைத்திருக்கிறது.
இந்த விஷயம் புதுவை முழுவதும் பரவிய நிலையில், சிறுமியை கொலை செய்தவரை கண்டுபிடிக்கக்கோரி போலீசாருக்கு எதிராக உறவினர்களும், பொதுமக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். சாலை, காவல் நிலையம், கடற்கரை என அனைத்து இடங்களிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் போலீசார் லேசான லத்தியடியை பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுபுறம் விசாரணை வளையத்தில் இருந்த 7 பேரில் இருவர் உண்மையை ஒப்புக்கொண்டனர். அதாவது, 60 வயதான விவேகானந்தன் எனும் முதியவர் சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்றிருக்கிறார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சியில் சிறுமி மயங்கி விடவே, பதற்றமடைந்த விவேகானந்தன், 19 வயது இளைஞரான கருணாசுடன் இணைந்து சிறுமியை கொலை செய்து, உடலை சாக்கு பையில் கட்டி சாக்கடையில் வீசியுள்ளார். இவை அனைத்தையும் இருவரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ வழக்கை பதிந்துள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்த, "இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது" என் கூறியுள்ளார்.
அதாவது, "புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் - தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.