பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எம்பி...!
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர்கள் சங்கமான மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனுக்கு கடந்த ஞாயிறு அன்று தேர்தல் நடந்தது . இதில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு அணியும் , நடிகர் விஷ்ணு மஞ்சு தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன . பிரகாஷ்ராஜ் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்து தலைவர் பதவிக்கு நின்றார் .
பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் . அவர் எப்படி தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என திரையுலகில் உள்ள பலரும் வெளிப்படையாக பேசினர் . தெலுங்கர் அல்லாத ஒருவர் சங்கப் பொறுப்பில் வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்து பிரகாஷ்ராஜுக்கு எதிராக வேலை பார்த்தனர் . இதுவரை இல்லாத அளவுக்கு சங்கத் தேர்தலில் இன துவேசம் கொடிகட்டிப் பறந்தது .
எதிர்பார்த்தது போல் பிரகாஷ்ராஜை தோற்கடித்தனர் . இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பிரகாஷ்ராஜ் . மேலும் , தெலுங்கு சினிமாவில் இனவாதப் போக்கு அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டினார் . தனது ராஜினாமாவுக்கு அதையே காரணமாகவும் கூறியிருந்தார் .
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . இந்நிலையில் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் எம்பி ரகுராம கிருஷ்ண ராஜு பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார் . " பெரும்பாலான தெலுங்கு நடிகர்களைவிட பிரகாஷ்ராஜ் சிறப்பாக தெலுங்கில் பேசுகிறார் . தெலுங்கை ஒழுங்காக பேசத் தெரியாதவர்களின் கமெண்டை அவர் பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லை . பிரகாஷ்ராஜுக்கு வாக்களிக்க உரிமை இருக்கும் போது அவர் ஏன் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாமல் போய்விடுவார் . பிரகாஷ்ராஜ் தனது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் . நடிகர்கள் சங்க நலனுக்காக அதனை அவர் செய்ய வேண்டும் " என கேட்டுக் கொண்டுள்ளார் .
... சிங்கள பாடகிக்கு வாய்ப்பு - ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஈழத்தமிழர்கள் கண்டனம்
பிரகாஷ்ராஜுக்கு திரையுலகினர் , பல அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் , ஆளும் கட்சியின் எம்பி ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது எரிகிற நெருப்பை அணைப்பதற்கு உதவியிருக்கிறது .
தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் , நடிகனாக தெலுங்கு சினிமாவுக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வேன் என பிரகாஷ்ராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .