பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? - உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை: பல ஆண்டுகளாக வாரிசு சான்றிதழ் பெறாதவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அரசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், “எனது தந்தை சி.பி. சுப்பிரமணிக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் திருவல்லிக்கேணி கஜபதி தோட்டத்தில் நிலம் வழங்கப்பட்டது. எனது தந்தை கடந்த 1998-ம் ஆண்டு இறந்து விட்டார். எனது தாயாரும், 2 அண்ணன்களும் இறந்து விட்டனர். தற்போது நானும், எனது சகோதரிகளான சாந்தகுமாரி, மேனகா ஆகியோர் மட்டும் உள்ளோம். எங்களது தந்தை இறந்தவுடன், நாங்கள் வாரிசு சான்றிதழ் பெறவில்லை.
தற்போது, குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய நிலத்துக்கு அரசாங்கம் பட்டா வழங்கி வருகிறது. எங்களிடம் வாரிசு சான்றிதழ் இல்லாததால், பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். வாரிசு சான்றிதழ் கோரி மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் கடந்த 2022 மார்ச் 30 அன்று மனு அளித்தேன். அந்த மனுவை நிராகரித்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே எங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஐ.கெல்வின் ஜோன்ஸ் ஆஜராகி, “பொதுவாக யாராவது ஒருவர் இறந்து விட்டால், அவரது வாரிசுகள் ஓராண்டுக்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் அணுகி வாரிசு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டு தாண்டிவிட்டால் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து பெறலாம். ஆனால், 7 ஆண்டுகள் தாண்டிவிட்டால் சட்ட ரீதியாக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துத்தான் வாரிசு சான்றிதழ் பெற முடியும் என்ற நிலை உள்ளது. அதற்கும் ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியுள்ளது. மனுதாரரைப் போல சட்ட விழிப்புணர்வு இல்லாத பொதுமக்கள் பலர் வாரிசு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்,” என்றார்.
அதையடுத்து நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில், “ஒருவரது இறப்பு சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டால் அவரது வாரிகள் யார் என்பதை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வாரிசு சான்றிதழ் பெறாதவர்கள், காலம் தாண்டி விண்ணப்பிக்கும்போது ஒருவேளை அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லை என்றால், தங்களது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என 5 நபர்களிடமிருந்து இவர்கள்தான் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்கள் என தனித்தனியாக பிரமாணப் பத்திரம் பெற்று தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிடலாம்.
இதற்கு போட்டியாகவோ அல்லது ஆட்சேபம் தெரிவித்தோ யாரும் எதிர் மனுக்களை தாக்கல் செய்யாவிட்டால் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கலாம். எனவே, மனுதாரர் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 5 பேரின் பிரமாணப் பத்திரங்களுடன் வரும் மார்ச் 28-ம் தேதி வட்டாட்சியர் முன்பாக ஆஜராக வேண்டும். அதனடிப்படையில் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி மனுதாரருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர்.மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description