பற்றி எரியும் வங்கதேசம்.. இடஒதுக்கீடு எதிர்ப்பால் கடும் வன்முறை.. 32 பேர் பலி.. பிரதமர் தான் காரணமா?
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
இதில் 32 பேர் பலியான நிலையில், 2,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் வங்கதேசத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் போராட்டத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கேதசத்தின் பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இவர் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது திடீரென்று வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்து வன்முறை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீடு விவகாரமாகும். அதாவது நம் நாட்டை போல் வங்கதேசத்திலும் அரசு பணிகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.
வங்கதேசத்தை பொறுத்தவரை அரசு பணிகளில் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதாவது முதலில் வங்கதேசம் பாகிஸ்தான் நாட்டுடன் இருந்தது. அதன்பிறகு 1971ம் ஆண்டில் தான் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரம் பெற வேண்டி போராடி உயிர் துறந்தவர்களின் வாரிசுகளுக்கு தான் அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு என்பது வழங்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீடு என்பது வங்கதேச நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய இறந்தவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் வரை தொடர்கிறது. இதனால் மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனென்றால் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்றால் மீதமுள்ள 70 சதவீத இடஒதுக்கீட்டில் பெண்கள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தலா 10 சதவீதம், சிறுபான்மையினருக்கு 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம் என்று மொத்தம் 56 சதவீதம் செல்கிறது.
இதனால் பலருக்கும் அரசு பணிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2018 ல் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட் இடஒதுக்கீடு என்பது ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜுன் 5ம் தேதி விசாரித்த அந்நாட்டின் உயர்நீதிமன்றம் மீண்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தலைநகர் டாக்காவில் மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அங்குள்ள அரசு ஒளிபரப்பு நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் தீவைத்தனர். இதனால் நிலைமை மோசமானது. இந்த வேளையில் வங்கதேசத்தை ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் நிலைமை மேலும் மோசமானது.
இந்த மோதலில் 32 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 2,500க்கும் அதிகமானவர்கள் காயடைந்துள்னர். இதனால் தற்போது வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்த போராட்டத்துக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் டாக்காவில் மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக அமைதியான முறையில் தான் போராடினார்கள். நேற்று தான் ஆக்ரோஷமாகி தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஷேக் ஹசீனா கூறிய வார்த்தை தான்முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஷேக் ஹசீனா நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அமைதியாக இருக்கும்படி அவர் வலியுறுத்தினர். இந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அவர் 'ரசாகர்கள்' என குறிப்பிட்டார். அதாவது பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிய விரும்பாத சிலர் அப்போது சில சூழ்ச்சிகளை செய்தனர். இந்த சூழ்ச்சிக்காரர்களை 'ரசாகர்கள்' என கூறினார். அந்த வகையில் இப்போதும் போராட்டத்தில் ஈடுபடுவோரை 'ரசாகர்கள்' என ஷேக் ஹசீனா கூறியது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.