நேற்று எடப்பாடி பழனிசாமி, இன்று டிடிவி தினகரன் - ஒரே புள்ளியில் அடுத்தடுத்து ஆருடம்!

வருகின்ற 2024 மக்களவைப் பொதுத் தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவைக்கும் பொது தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், ராதா நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்த அமமுக பிரமுகர் இராவணனின் மறைவிற்கு, அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து இன்று ஆறுதல் கூறிய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது, "வருகின்ற மக்களவை பொதுத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்து போட்டியிடும்.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் அமமுக சிறு அணில் போல் செயல்படும். ஓ பன்னீர்செல்வத்துடன் நான் பேசிப் பல வருடங்கள் ஆகிறது" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறலாம் என்று, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
