dark_mode
Image
  • Saturday, 10 January 2026

நெடுஞ்சாலை அமைச்சர் வேலுவுக்கு எதிராக சாலைப்பணியாளர்கள் போராட முடிவு

நெடுஞ்சாலை அமைச்சர் வேலுவுக்கு எதிராக சாலைப்பணியாளர்கள் போராட முடிவு

மதுரை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அமைச்சர் வேலுவுக்கு எதிராக போராட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில தலைவர் வைரவன், பொதுச் செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் சாலைப்பணியாளரின் 41 மாத பணிநீக்க காலம் முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் அதை தீர்ப்பாக வழங்கியுள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், மேல்முறையீடு செய்ய அமைச்சர் வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் சாலைப் பணியாளரை இழிவுபடுத்தும் வகையில் சங்க நிர்வாகிகளிடம் தொழிற்சங்கத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். மேலும் பணிநீக்கம் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தற்கு தற்போது வருந்துவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரின் இத்தகைய போக்கை கண்டித்தும், அரசு ஊழியர், ஆசிரியர்களின் சங்க நிர்வாகிகளோடு பேச முதல்வரால் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்து அமைச்சர் வேலுவை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் 2026 ஜன., 5 ல் அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வலியுறுத்தியும் மதுரையில் சர்வ கட்சி தலைவர்களையும் அழைத்து மாநாடு நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின் 2026 பிப்.25 முதல்வர் அலுவலகம் சென்று முறையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

related_post