நீட், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லா
நீட் தேர்வு மற்றும் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு தமுமுக சார்பில் பொது மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா கூறும்போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக சிறப்பாக எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு உடலை அடக்கம் செய்து வருகின்றனர் என்றும் இவர்களை தமிழக அரசு முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், தமிழ்நாட்டில் நீட் தேர்வு மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் அதே போல் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத் திருத்தம் சட்டம் மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.