நிறைவு பெறும் 21 நாள் ஜாமீன்.. வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான ஜாமீன் நிறைவு பெறும்நிலையில், தான் சிறையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் டெல்லிக்கான பணி நிற்காது என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக 21 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
21 நாட்கள் ஜாமீன் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறும்நிலையில், டெல்லி மக்களிடையே வீடியோ மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றி உள்ளார். அதில், நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக சிறைக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் தன்னை பல வழிகளில் சித்ரவதை செய்ததாகவும், 30 ஆண்டுகளாக நீரிழிவு நோயுடன் போராடும் தனக்கு இன்சுலின் ஊசி தராமல் கொடுமை செய்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். சிறையில் இருந்த 50 நாட்களில் 6 கிலோ உடல் எடை குறைந்துவிட்டதாகவும் தனது எடை கூடவில்லை என்பதால் உடலில் பெரிய நோய் இருக்கலாம் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.