நாடாளுமன்ற தேர்தல்..! மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன.
இங்குள்ள பல முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தால், தனிச் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.