நாகை, காரைக்கால் ரயில் வசதிகள் : பயணிகள் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள்!

நாகை மாவட்டம், காரைக்கால் பகுதிகளுக்கான ரயில் தேவைகள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் சங்கம் முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயணிகள் சங்கம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகளை திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தது. ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் எஸ். மோகன் மற்றும் செயலாளர் சித்திக் ஆகியோர், கோட்ட ரயில்வே மேலாளர் பாலக ராம் நெகியை திருச்சியில் அண்மையில் அன்று சந்தித்தனர். அப்போது, ஒரு விரிவான கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினர். இந்த மனுவில், பல புதிய ரயில் சேவைகளைத் தொடங்கவும், தற்போதுள்ள சேவைகளை மேம்படுத்தவும் முக்கியமான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
மனுவில், “கடந்த 25 ஆண்டுகளாக காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியில் இருந்து மதுரை அல்லது திருநெல்வேலிக்கு நேரடி ரயில் சேவை இல்லை என்று சங்கம் சுட்டிக்காட்டியது. கோவைக்கு நேரடி ரயில் சேவை இல்லை. பெங்களூருவுக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இல்லை. தற்போது காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் காலை ரயில் 56 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில் 17 மணி நேரத்திற்கும் மேலாக பயணிக்கிறது. எனவே, பெங்களூருவுக்கு ஒரு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே திருநள்ளாறு, நாகூர் வழியாக ஒரு பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் வழியாக ஒரு தினசரி காலை எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். விழுப்புரம்-மயிலாடுதுறை ரயிலை திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் இரண்டாவது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப் பெரிய பொது போக்குவரத்தாக ரயில்வே இருந்து வருகிறது. விரைவாக இலக்கை அடைந்துவிடலாம் என்பதாலும், கட்டணம் குறைவு என்பதாலும் பயணிகள் ரயிலையே பெரும்பாலும் தேர்வு செய்யும் சூழல் உள்ளது. இந்த நிலையில்தான் நாகை ரயில் பயணிகள் சங்கம் இவ்வாறான கோரிக்கைகளை வைத்துள்ளது.