dark_mode
Image
  • Thursday, 31 July 2025

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ஆக., 2ல் மாநிலம் முழுதும் துவக்கம்

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ஆக., 2ல் மாநிலம் முழுதும் துவக்கம்

சென்னை:''நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், ஆகஸ்ட் 2ல் மாநிலம் முழுதும் துவக்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் முதல்வர் காப்பீடு திட்ட அட்டை பெற முடியும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

சென்னை மயிலாப்பூர், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், ஆகஸ்ட் 2ல், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் துவக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் அளித்த பேட்டி:

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை, முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனை பாதுகாத்திடும் வகையில், மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்காக தனியார் மருத்துவமனைகளில், 15,000 ரூபாய் வரையிலும், அரசு மருத்துவமனைகளில், 4,000 ரூபாய் வரையிலும், செலவிட்டு வருகின்றனர்.

எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும், இலவசமாக முழு உடல் பரிசோதனை திட்டம் துவக்கப்பட உள்ளது.

இத்திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, பகுதி வாரியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, துண்டு பிரசுரங்கள் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் இந்திய மருத்துவ முறை உள்ளிட்டவை அடங்கும்.

மேலும், கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் போன்றவற்றை கண்டறிந்து, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்.

இதே முகாமில், மாற்றத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படும். புதிய காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும், முகாமில் விண்ணப்பிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக மாநிலம் முழுதும், 1,256 முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

related_post