தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு... பயணிகள் கடும் அவதி

சென்னையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில் சேவைக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் அதிகபடியாக பயன்படுத்துவது மெட்ரோ ரயில் சேவை தான். மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி பலரும் அலுவலகம் சென்று வருகின்றனர். இன்றைய நாட்களில் சென்னை மக்களின் உயிர்நாடியாக மெட்ரோ ரயில் திகழ்கிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் மூலமாக அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக வெளிநாட்டிலிருந்து சென்னை வருபவர்கள் மெட்ரோ ரயில் மூலமாகத்தான் தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர்.
இதே போல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால், புறநகர் சேவையும் இருக்கிறது. இருப்பினும் மெட்ரோ ரயில் சேவை சற்று துரிதமாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால் மெட்ரோ சேவையை தான் பயன்படுத்துகின்றனர்.
தொழில்நுட்ப கோளாறு
அந்த வகையில் நேற்று சென்னை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரயில் நிலையத்துக்குச் செல்லாமல் மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே நின்று விட்டது.இதனால் பயணிகள் வேறு வழியின்றி கீழ இறங்கி, ஆட்டோ பிடித்து தங்களது இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். அதேசமயம் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஆட்டோ, பஸ் என கிடைக்கக்கூடிய வாகனத்தில் ஏறி கடைசி நேரத்தில் விமான நிலையம் சென்றடைந்தனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
1.30 மணிநேரம் பாதிப்பு
மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்பக் கோளாறு 7 மணிக்குப் பின்னால் தான் சரி செய்யப்பட்டது. இடைப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் பயணிகள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகினர். இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இருப்பினும் விம்கோ நகர் டெப்போ முதல் மீனம்பாக்கம் வரையிலான சேவை வழக்கம்போல தொடரும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்காக நாங்கள் வருந்துகிறோம் எனக் கூறப்பட்டிருந்தது.
மீனம்பாக்கத்தில் இருந்து விமான நிலையத்திற்கு மினி பஸ், ஆட்டோ ரிக்ஷா என சென்றாலும், மெட்ரோ ரயில் சேவை மூலமாக செல்வதால் நேரம் மிச்சமாகும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பயணி கேள்வி
இது தொடர்பாக சென்னை குரோம்பேட்டை சேர்ந்த வரதராஜன் என்பவர் நம்மிடம் கூறியதாவது:கடைசி நேரத்தில் பயணிகளின் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சிதைத்து விட்டது. இது எங்களுக்கு மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது. பலரும் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தங்களது வாகனங்களை எடுப்பதற்காக ஆட்டோ பிடித்து மீண்டும் அங்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் லிமிடெட் செய்யும் தவறுக்காக பயணிகள் ஏன் ஆட்டோவுக்கு கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டும். இது போன்ற தவறு ஏற்படாமல் மெட்ரோ பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.