தவெகவில் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு முக்கிய பதவி : விஜய் அறிவிப்பு!

சிடிஆர் நிர்மல்குமார், பேச்சாளர் ராஜ்மோகனுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பை வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு பலரும் தவெகவில் இணையத் தொடங்கினர். குறிப்பாக விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகி சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பும், நிர்மல்குமாருக்கு ஊடகப் பிரிவு துணை பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. அண்மையில் விருப்ப ஓய்வு பெற்று தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தீவிரமாக தயாராகி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். விமான நிலையத்தில் இருந்து அவர் பரப்புரை செய்த மரக்கடை பகுதிக்கு செல்லவே அவருக்கு சில மணி நேரங்கள் பிடித்தது. அந்த அளவுக்கு அவருடைய பரப்புரை மக்கள் கூட்டத்தால் குறிப்பாக இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக பெரம்பலூரில் பரப்புரை செய்ய தாமதமானதால் அங்கு பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை கிளம்பினார். இதனையடுத்து ஒரு நாளில் இரண்டு பகுதிகளில் மட்டும் பரப்புரை செய்யுமாறு திட்டம் வகுத்துள்ளது தவெக.
சிடிஆர் நிர்மல்குமார் பாஜக மற்றும் அதிமுகவில் ஐடி விங்கில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். திமுகவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளார். இன்று கூட நிர்மல்குமார் தொடர்ந்த வழக்கில் விஜய் பரப்புரை தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராஜ்மோகன் தவெக சார்பில் ஊடகங்களை சந்தித்து கட்சியின் நிலைப்பாடுகளை விளக்கி வருகிறார். இந்த நிலையில்தான் இருவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.