dark_mode
Image
  • Sunday, 11 January 2026

தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை.. எதற்கு நீங்கள் ஆட்சியில்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை.. எதற்கு நீங்கள் ஆட்சியில்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக திமுக அரசை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மாநிலத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும், குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் திருத்தணியில் நடந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய அவர், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக கூறியுள்ளார்.

அச்சத்தில் மக்கள்

திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு சாதாரண குடிமகன் மீது இரண்டு இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். எந்த விதமான தூண்டுதலும் இல்லாமல், பொதுவிடத்தில் ஒருவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்படும் சூழல் உருவாகி இருப்பது சட்டம், ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மக்கள் அச்சத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு இல்லாத நிலை

திருப்பூரில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். போதைப்பொருள் போதையில் இருந்த ஒரு இளைஞர், நடுரோட்டில் காவலரை கத்தியுடன் விரட்டியதாக வந்த செய்தி, காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டதை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். காவலர்களே பாதுகாப்பின்றி இருப்பின், பொதுமக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் புழக்கம்

போதைப்பொருள் புழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள் தினசரி செய்திகளாகி வருவதை அரசு கவனிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அடுத்த நொடி யார், எந்த நிலையில் இருந்து தாக்குவார்கள் என்ற அச்சத்துடன் தமிழக மக்கள் வாழ வேண்டிய சூழல் உருவாகி வருவதாகவும், இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 அடி கஞ்சா செடி?

தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை என்று என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். கடந்த ஒரு வாரத்திலேயே நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள், போதைப்பொருள் புழக்கம் எந்த அளவுக்கு பரவலாக உள்ளது என்பதைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார். இத்தனை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இது தெரியாதா என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், சட்டம், ஒழுங்கை காக்க இயலாவிட்டால், அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். நிர்வாகம் குறித்து தெளிவான புரிதல் இல்லாத தலைமையின் கீழ் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் இதனால் துன்புறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு, தற்போதைய ஆட்சியிலிருந்து மக்கள் விடுதலை பெறும் ஆண்டாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் தனது பதிவில் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
 
 

related_post