தமிழ்நாட்டில் அடுத்த முதல்வர் யார்? – வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்

2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அடுத்த முதல்வர் யார் என்பதைக் கணிக்க சில கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா டுடே நிறுவனத்துடன் இணைந்து சி-வோட்டர் நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள், தமிழகத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெறுவார் எனக் காட்டுகின்றன. 27% மக்கள் 2026 தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக காண விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மிகவும் எதிர்பாராத வகையில், நடிகரும், ‘தமிழக வெற்றிக் கழக’த்தின் தலைவருமான விஜய், 18% ஆதரவுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதலமைச்சர் பதவிக்கு அவருக்கு கிடைத்த இந்த பெரிய ஆதரவு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
அண்மையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கணிப்பில் மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 10% மக்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர். இது அ.தி.மு.க.வுக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் தனது ஆதிக்கத்தை வளர்க்க முயன்றுவரும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, 9% ஆதரவைப் பெற்றுள்ளார். இது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள், இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பல அரசியல் விமர்சகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் அவரது ஆதரவு இன்னும் அதிகரிக்கலாம் என்ற கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
கருத்துக்கணிப்பில், தமிழக அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டது. 15% மக்கள் தமிழக அரசின் செயல்பாட்டில் மிகவும் திருப்தியாக உள்ளனர், 36% மக்கள் ஓரளவு திருப்தி உள்ளதாகவும், 25% மக்கள் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 24% மக்கள் எந்த கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் மக்கள் கருத்து தெரிவித்தனர். 22% மக்கள் அவரது செயல்பாடு நல்லது என்று கூறினார்கள், 33% மக்கள் ஓரளவு திருப்தி உள்ளதாகவும், 22% மக்கள் திருப்தி இல்லை என்றும் தெரிவித்தனர். 23% மக்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதிபி எடப்பாடி பழனிசாமிக்கு குறைந்த ஆதரவு கிடைத்துள்ளது. 8% மக்கள் அவரது செயல்பாட்டில் மிகவும் திருப்தி உள்ளதாகவும், 27% மக்கள் ஓரளவுக்கு திருப்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 32% மக்கள் திருப்தி இல்லை என்றும், 33% மக்கள் எந்த கருத்தும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
கருத்துக்கணிப்பில், மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. 15% மக்கள் பெண்களின் பாதுகாப்பை முக்கிய பிரச்சினையாகக் குறிப்பிட, 12% மக்கள் விலைவாசி உயர்வை குறிப்பிடினர். 10% மக்கள் போதைப்பொருள் மற்றும் மதுவுடனான பிரச்சினைகளை முக்கிய பிரச்சினையாகக் கூற, 8% மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமையை முக்கிய பிரச்சினையாகக் குறிப்பிடினர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தபோது, 16% மக்கள் மிகவும் திருப்தி உள்ளதாகவும், 32% மக்கள் ஓரளவுக்கு திருப்தி உள்ளதாகவும் தெரிவித்தனர். 25% மக்கள் திருப்தி இல்லை என்றும், 27% மக்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறினர்.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகத் தேர்வாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அவரது ஆட்சியில் மக்கள் முழுமையாக திருப்தியடையவில்லை என்பதும் இதில் வெளிப்பட்டுள்ளது. மிகவும் ஆச்சரியமளிக்கும் விஷயம், நடிகர் விஜய் மிகக் குறைந்த காலத்திலேயே அரசியல் ரீதியாக வலுவான போட்டியாளராக உருவாகியிருப்பது. அவரது கட்சி இன்னும் தேர்தலில் அறிமுகமாகாத நிலையிலும், மக்கள் மத்தியில் இரண்டாவது இடம் பிடித்திருப்பது அரசியல் வல்லுநர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வும் மக்கள் ஆதரவை அதிகரிக்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. 2026 தேர்தல் நடப்பது வரை அரசியல் சூழல் மேலும் மாறக்கூடும். தமிழக மக்கள் யார் மீது அதிக நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எதிர்வரும் நாட்கள் பதில் அளிக்கும்.
செய்தியாளர்.மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description