
தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் ஜீவா காலமானார் !!
தமிழக பசுமை இயக்கத் தலைவர் ஈரோடு டாக்டர் ஜீவா என்ற வெ. ஜீவானந்தம் (75) காலமானார்.
தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கச் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாகப் டாக்டர் ஜீவா மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இடதுசாரி சிந்தனையாளரான இவருடைய தந்தை எஸ்.பி. வெங்கடாசலம் விடுதலைப் போராட்ட வீரராவார். இதனால் சிறு வயது முதலே ஜீவாவும் சமூக பற்றுக்கொண்டவராக வளர்ந்தார்.
திருச்சியில் பட்டப் படிப்பை முடித்த ஜீவா, பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். முடித்தார். மேலும் சென்னையில் மயக்கவியல் சிறப்புப் படிப்பு படித்தார். காந்திய - இடதுசாரி ஆர்வலரான டாக்டர் ஜீவா, சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஆர்வம் செலுத்தி மிகத்தீவிரமாக செயல்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு இதயம்சார் உடல்நலக் குறைவு இருந்து வந்தது. அதற்காக டாக்டர் ஜீவா சிகிச்சை பெற்று ஓய்விலிருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று ஈரோட்டில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நண்பகல் 12 மணிக்கு ஆத்மா மின்மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த டாக்டர் ஜீவாவுக்கு இந்திரா என்ற மனைவியும் சத்யா என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியதோடு பல நூல்களையும் டாக்டர் ஜீவா எழுதியுள்ளார். மேலும் , ஏராளமான நூல்களையும் அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.