தமிழக அரசு : ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது!!
தமிழக அரசு பாலியல் ரீதியிலான குற்றங்களை தடுக்க ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் ஒவ்வொரு பள்ளியிலும் "மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு" அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்குள் குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்றும், அந்த மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் உருவாக்கப்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இணையவழி கற்றல் நிகழ்வின்போது ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறை சூழலுக்குகேற்ப கண்ணியமாக உடை அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்வதோடு, அப்பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவினர் ஆய்வு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ சட்டததில் குறிப்பிட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாக்கும் வகையில் வருடந்தோறும் பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.