dark_mode
Image
  • Friday, 29 November 2024

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டுமருந்து முகாம்: 43,051 மையங்களில் 58 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க திட்டம்

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டுமருந்து முகாம்: 43,051 மையங்களில் 58 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க திட்டம்

தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ள நிலையில், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான போலியோசொட்டுமருந்து வழங்கும் முகாம்கள் நாடு முழுவதும் மார்ச். 3-ம் தேதி (இன்று) நடைபெறுகின்றன.

தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள முகாம்களில், 57.84லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.

மேலும், பேருந்து, ரயில் மற்றும்விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும் சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளன.

2 லட்சம் பேர்.. இந்தப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொட்டுமருந்து வழங்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். சொட்டுமருந்து கொடுக்கும் முன்பு சோப்பு கொண்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சொட்டுமருந்து வழங்குமாறு தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொட்டுமருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால், தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை தமிழகம் அடைந்துள்ளது.

இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் அவசியம். எனவே, பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டுமருந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ சொட்டுமருந்து முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

சென்னை மாநகரில் 5 வயதுக்கு உட்பட்ட 6.68 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்குவதற்காக 1,646 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சொட்டுமருந்து வழங்கும் பணியில் 7 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர் என்று தமிழக சுகாதரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டுமருந்து முகாம்: 43,051 மையங்களில் 58 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க திட்டம்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description