
தனியார்மயமாக்கல் குறித்து ராகுல் விமர்சனம்
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கண்டித்து 2 நாள் போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்., எம்.பி., ராகுல், மத்திய அரசின் கொள்கையை விமர்சித்துள்ளார். மத்திய அரசு சுமையாக விளங்கக் கூடிய பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளது. இதனை கண்டித்து பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 9 ஊழியர் சங்கங்கள் திங்களன்று 2 நாள் போராட்டத்தை தொடங்கின.வங்கி பரிவர்த்தனைகள் பாதிப்புஇன்று 2-ம் நாள் போராட்டம் தொடர்ந்தது. இதனால் காசோலைகளை டெபாசிட் முடியாமலும், பணம் எடுப்பது, போடுவது போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டன. அரசாங்கம் மற்றும் வணிக துறையினர் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் வங்கி ஊழியர்களின் போராட்டத்துக்கு காங்., எம்.பி., ராகுல் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில், "மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை தேசியமயமாக்குகிறது. பொதுத் துறை வங்கிகளை மோடியின் நண்பர்களுக்கு விற்பது இந்தியாவின் நிதி பாதுகாப்பை கடும் சமரசத்துக்குள்ளாக்குவது ஆகும். வேலைநிறுத்தம் செய்யும் வங்கி ஊழியர்களுடன் நான் ஒன்றுபடுகிறேன்." என கூறினார்.