டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்றார் சுட்டி குழந்தை..!
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நிறைவடைந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, 'சூப்பர்12' சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறின. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 138 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்த சாம் கரன் "தொடர் நாயகன்" விருதையும் தட்டி சென்றார். முன்னதாக நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டு இருந்தது. ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களிள் யார் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த வீரர் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஐசிசி தொடர்நாயகன் விருதுக்கு விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சதாப் கான், ஷாகின் ஆப்ரிடி, சாம் கரண், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் கேல்ஸ், சிக்கந்தர் ராசா, ஹசரங்கா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இறுதி போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சாம் கரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.