டிரம்ப் விவகாரத்தில் ராகுல் பிடிவாதம் முதிர்ச்சியற்றது

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. போரை நிறுத்தும்படி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின.
இறுதியில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் தரப்பில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபரின் தலையீடு இருப்பதால், இது குறித்து பார்லி.,யில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மழைக்கால கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் நேற்று முன்தினம் பேசிய மோடி, 'இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில், எந்த உலக நாடுகளின் தலைவர்களின் தலையீடு இல்லை' என, அறிவித்தார். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், 'பஹல்காம் தாக்குதல் நடந்த ஏப்., 22 - ஜூன் 17 வரை பிரதமர் மோடி - டிரம்ப் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் இல்லை' என பார்லி.,யின் இரு சபை களிலும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இருப்பினும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், 'இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பொய் சொல்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய் சொன்னார் என வெளிப்படையாக யாரும் கூறவில்லை' என, வாதிட்டு வருகின்றனர். இது ராகுலின் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபரின் தலையீடு இல்லை என ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் உறுதிபட தெரிவித்தும், ராகுல் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் பிடிவாதம் பிடிக்கின்றனர். குறிப்பாக, ராகுலின் பேச்சு முதிர்ச்சியற்றது.
பார்லிமென்டில், நட்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபரை பகிரங்கமாக பொய்யர் என பிரதமரால் எப்படி கூற முடியும்.
அந்நாட்டின் அதிபரை பொய்யர் என கூறுவது இயலாததாகும். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் இப்படிதான் உறவுகள் இருந்தனவா? வெளியுறவு கொள்கையில் நிதானத்தை கடைப்பிடித்தல் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.