
ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி...!
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னமும் தொடர்கிறது. முதல் நோய் தொற்று ஏற்பட்டு ஒரு வருடத்தை கடந்துவிட்டோம். ஆனாலும் வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. நடுவில் குறையத் தொடங்கிய நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதற்காக கொரோனா தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே, ஃபைசர் - பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராசெனகா நிறுவனங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அவை இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன.
இந்நிலையில் ஒரு டோஸ் மட்டும் செலுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவத்திற்கு உலக சுகாதார நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக இந்த மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் 100 மில்லியன் டோஸ் மருந்தை அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. அதாவது 10 கோடி டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி. அதனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தி பணியில் தீவிரம் காட்டி வருகிறது.